திருப்பனந்தாள் அருகே பாதுகாப்பு மையத்துக்கு சாமி சிலைகளை எடுத்து செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு

திருப்பனந்தாள் அருகே பாதுகாப்பு மையத்துக்கு சாமி சிலைகளை எடுத்து செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2018-01-19 22:00 GMT
திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே அணைக்கரையில் வில்லிஆண்டவர் கோவில், மாரியம்மன் கோவில் ஆகிய 2 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் இருந்து வில்லி ஆண்டவர், அகோர வீரபத்திரர், நல்ல நாயகி, மாரியம்மன், சின்ன அம்மன், உத்திராபதி உள்ளிட்ட 9 சாமி சிலைகளை கும்பகோணத்தில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு செல்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவராம்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி, கோவில் செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று கோவிலுக்கு வந்தனர். சிலைகளை கோவிலில் இருந்து எடுத்து செல்ல அதிகாரிகள் முயன்றனர். அப்போது அங்கு இருந்த அணைக்கரை கிராம தலைவர்கள் ராஜ ராமன், பாலசுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேல்ராஜன், வக்கீல் இளங்கோவன் மற்றும் கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் சிலைகளை பாதுகாப்பு மையத்துக்கு எடுத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோவிலில் உள்ள சிலைகளை பாதுகாப்பதற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்து லாக்கர் வசதி, கண்காணிப்பு கேமரா வசதி செய்து இருப்பதாகவும், சாமி தரிசனம் செய்வதற்கு சிலைகள் கோவிலில் அவசியம் இருக்க வேண்டும் என்றும் கிராம மக்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கூறினர்.

அப்போது அதிகாரிகள், சிலைகளை பாதுகாப்பது குறித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால் சிலைகளை எடுத்து செல்ல வேண்டும் என கிராம மக்களிடம் அறிவுறுத்தினர். ஆனால் ஐகோர்ட்டில் கிராமத்தின் சார்பில் மனு அளித்து தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்த இருப்பதால், சிலைகளை எடுத்து செல்ல அனுமதிக்கமாட்டோம் என கூறி கிராம மக்கள், அதிகாரிகளை திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கோவிலில் இருந்து சிலைகளை எடுத்து சென்று பாதுகாப்பு மையத்தில் வைப்பதற்கு அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். இதுவரை 4 முறை கோவிலுக்கு வந்தும் கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக சிலைகளை அதிகாரிகள் எடுத்து செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்