வீட்டில் தனியாக வசித்த பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வீட்டில் தனியாக வசித்த பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-01-19 22:00 GMT
பேரையூர்,

பேரையூர் அருகே உள்ள தென்னமநல்லூரை சேர்ந்த மாரியப்பன் மனைவி பெரியகருப்பாயி (வயது 55). இவரது வளர்ப்பு மகன் கணேசமூர்த்தி மதுரை மாநகராட்சியில் டிரைவராக பணிபுரிகிறார். கணவர் மாரியப்பன் இறந்துவிட்ட நிலையில் பெரியகருப்பாயி வீட்டில் தனியாக வசித்து வந்தார். மேலும், ஆடுகள் வளர்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை நீண்டநேரமாகியும் பெரியகருப்பாயியின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து சம்பவ இடத்துக்கு டி.கல்லுப்பட்டி இன்ஸ்பெக்டர் மாலினி, வில்லூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறம் பெரியகருப்பாயி கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மேலும், அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி, ½பவுன் தோடு ஆகியவை திருட்டு போயிருந்தது. மேலும், பெரியகருப்பாயியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் பெரிய கருப்பாயியை கொலை செய்து நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியகருப்பாயியை கொலை செய்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்