கூட்டுறவு வங்கிகளில் உடனுக்குடன் பயிர் கடன் வழங்க வேண்டும், விவசாயிகள் வலியுறுத்தல்

கூட்டுறவு வங்கிகளில் உடனுக்குடன் பயிர் கடன் வழங்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

Update: 2018-01-19 22:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசியதும், அதற்கு கலெக்டர் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:-

விவசாயி ராமச்சந்திரன்:- ஆவுடையார்பட்டு ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: பொதுப்பணித்துறை மூலம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்படும்.

விவசாயி ராஜேந்திரன்:- முக்குணம் பெரிய ஏரியின் மதகு உடைந்து பல மாதங்கள் ஆகிறது. இதை சரிசெய்ய பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து வருகிறது. அந்த பயிர்களுக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டும்.

கலெக்டர்: முக்குணம் ஏரி மதகை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்திருந்தால் இழப்பீடு வழங்கப்படும். இனி பயிர் செய்யக்கூடிய பயிர்களுக்கு வருகிற பிப்ரவரி 15-ந்தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும்.

விவசாயி சண்முகம்:- கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வழங்குவதில் தாமதம் செய்து விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். உடனுக்குடன் பயிர்கடன்வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுததி மேலும் பல விவசாயிகள் பேசினர்

கலெக்டர்: உடனுக்குடன் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி சுப்பிரமணி:- திருக்கோவிலூர் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட விவசாய பயிர்களை உலர வைக்க உலர்களங்கள் இல்லை. போதிய உலர்கள வசதியை செய்து கொடுக்க வேண்டும். தற்போது பருவமழை குறைந்த அளவே பெய்துள்ளதால் பெரும்பாலான ஏரிகளில் தண்ணீர் இல்லை. எனவே ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

கலெக்டர்: திருக்கோவிலூர் பகுதியில் உலர்களங்கள் அமைக்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஏற்பாடு செய்யப்படும். ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.

விவசாயி ஜெயராமன்:- கணையார் ஏரி 10 வருடமாக ஆக்கிரமிப்பில் உள்ளது. பலமுறை கூறியும் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் அழித்து நாசம் செய்து வருகிறது. அந்த காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். உளுந்தூர்பேட்டை- கள்ளக்குறிச்சி சாலையில் செல்லும் பஸ்கள், தியாகதுருகம் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதில்லை. பஸ் நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: கணையார் ஏரி ஆக்கிரமிப்புதாரர்களுக்கு ஓரிரு நாளில் நோட்டீசு அனுப்பப்பட்டு விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். காட்டுப்பன்றிகளிடம் இருந்து விவசாய பயிர்களை காக்க வனத்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தியாகதுருகம் பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் மூலம் உரிய ஏற்பாடு செய்யப்படும்.

விவசாயி முருகன்:- ஆனைவாரி ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த மாற்றுப்பாதையில் சாலைகள் படுமோசமாக உள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.

கலெக்டர்: விரைவில் சாலை சீரமைக்கப்படும்.

விவசாயி கிருஷ்ணமூர்த்தி:- தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சித்தணி கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும்- குழியுமாக உள்ளது. அந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும். அதுபோல் வடிகால் வாய்க்கால்களும் தூர்ந்து போயுள்ளது. அவற்றை தூர்வார வேண்டும்.

கலெக்டர்: சித்தணி சாலையை சீரமைக்கவும், வாய்க்கால்களை தூர்வாரவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விவசாயி சிவராமன்:- மாநில அரசு கரும்புக்கு அறிவித்த ஆதார விலையை தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்குவதில்லை. அரசு அறிவித்த விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்க வேண்டிய நிலுவைத்தொகையும் உடனே கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கென மீண்டும் ஒரு முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண்டும்

கலெக்டர்: முத்தரப்பு கூட்டம் நடத்தி கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை முழுவதும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

விவசாயி சுந்தரம்:- அரசு பஸ்களில் 10 ரூபாய் நாணயங்களை கண்டக்டர்கள் வாங்க மறுக்கின்றனர்.

கலெக்டர்: 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கண்டக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி முருகையன்:- கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்குவதில் அரியூர் தனியார் சர்க்கரை ஆலை, தவறான தகவலை கூறி விவசாயிகளிடம் கையெழுத்து பெறுகின்றனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: விவசாயிகள் மத்தியில் தவறான தகவலை பரப்பினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு விவாதங்கள் நடந்தது.

மேலும் செய்திகள்