வீடு எப்படியோ... நாடு அப்படியே...!
“கல்வியிற் சிறந்த தமிழ்நாடு”. நூறாண்டுகளுக்கு முன்பு மகாகவி பாரதி சொன்னது. உண்மைதான். அகன்ற கல்வியும், ஆழ்ந்த அறிவும் தமிழ் இனத்தின் தனி அடையாளங்கள். ஆனால் இதனை, காதலும் வீரமும் என்று எப்போது மாற்றினோமோ அப்போதே தொடங்கி விட்டது நமது பின்னடைவு.
தமிழகத்தில் கல்வி நிலை குறித்த ஆண்டு ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. 14 முதல் 18 வயது வரை உள்ள உயர் நிலைப்பள்ளி மாணவர்களில், 24.6 சதவீத பேருக்கு மட்டுமே, கணக்குப் பாடத்தில் சாதாரண கழித்தல் கேள்விக்கு பதில் சொல்ல முடிகிறது. 28.4 சதவீத பேருக்கு மட்டுமே, இரண்டு இலக்க எண்ணைப் பார்த்த உடனேயே, சரியாகச் சொல்ல முடிகிறது. இதை எல்லாம்விட, 17 சதவீத பேரால், இரண்டாம் வகுப்பு, தமிழ்ப் பாடத்தைப் படிக்க முடியவில்லையாம்! அதிர்ச்சி தருகிறது இந்த ஆய்வறிக்கை. இதிலே வருத்தம் தருகிற இன்னொரு செய்தி, இந்த ஆய்வு தென் தமிழகத்திலே நடத்தப்பட்டு இருக்கிறது.
பொதுவாக தமிழ்நாடு, கல்வி நிலையில் மேம்பட்டு இருந்தாலும், தென் தமிழகம் அதனினும் பல படிகள் மேலே, உலகத்தின் தலைசிறந்த கல்வி மண்டலமாகத் திகழ்கிற ஒரு பகுதி. தமிழ்நாட்டின் பிற பகுதிகளை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. விவசாயத்துக்கு, நெசவுக்கு, தொழில் முன்னேற்றத்துக்கு என்று தனித்தனியே பிரபலமாக சில மண்டலங்கள் இருப்பது போன்று, கல்விக்கு தென் தமிழக மாவட்டங்கள்.
கல்வி நிறுவனங்கள், இவற்றை நிர்வகிக்கிற சமூக அமைப்புகள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் நிறைந்து இருக்கிற, தமிழகத்தின் அறிவு மையமாகவே, பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது தென் தமிழகம். அங்கிருந்து வந்தவர்தான் பாரதியார். அதனால்தான் தமிழ்நாட்டின் கல்வி நிலை, அறிவு மேம்பாடு குறித்து, வானளாவப் புகழ்கிறார். அத்தனை உயரத்தில் இருந்த தென் தமிழகத்திலேயே, கல்வித் தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. தாள முடியாத அதிர்ச்சி. இந்த சரிவுக்கான முக்கிய காரணமாக ஆய்வறிக்கை சொல்வது ‘மொபைல் போன்’ பயன்பாடு.
இன்றைய சிறுவர்கள், இளைஞர்கள், தங்களின் பொன்னான நேரத்தை ‘மொபைல்’களில் வீண் அடிக்கிறார்கள்; தவறான சிந்தனைகளுக்கும், தீய பழக்கங்களுக்கும் அடிமையாகிப் போகிறார்கள். போதாக்குறைக்கு, வித விதமாய் வாகனங்கள், மது வகைகள், கேளிக்கைகள் வேறு. கல்வியில் நாட்டம் குறையத்தானே செய்யும்?
இந்தச் சரிவுக்கு, பள்ளிகளையும் ஆசிரியர்களையும் குறை சொல்லி, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். குடும்பத்தில், பெரியவர்களின் பொறுப்பின்மைதான், இந்த அவல நிலைக்கு நேரடிக்காரணம். ‘படிக்கிற வயசுல எதுக்கு உனக்கு வண்டி...?’ என்று கேட்ட பெற்றோரை இன்று காணவில்லை. எட்டு வயது கூட நிரம்பாத, கீழே ஊன்றுவதற்கு கால் எட்டாத பையனை, ‘டூ வீலர்’ ஓட்டுவதற்கு அனுமதிக்கிற அம்மா, அப்பாக்கள் எத்தனை பேரைப் பார்க்கிறோம்...?
‘காலை எழுந்தவுடன் படிப்பு. விளக்கு வைக்கிற நேரம் வந்தா, ‘அரட்டை அடிச்சதெல்லாம் போதும்... கை கால் கழுவிட்டு, படிக்கிற வேலையைப் பாரு..’ என்று அதட்டிப் படிக்க வைத்த பெற்றோர் இருந்தார்கள். தினந்தோறும் காலையும், மாலையும் ஒவ்வொரு வீடும், ஒரு பள்ளி வகுப்பறை போலவே இருந்தது. இன்று...?
ஒரு ஆச்சரியமான முரண்பாடு. அந்தக் காலத்துல, பெற்றோருக்கு படிப்பு இல்லை; ஆனால், பிள்ளைகள் நன்றாகப் படிப்பதற்கு, ஒழுக்கமாக வளர்வதற்கு உறுதுணையாய் இருந்தார்கள். அவர்களின் ஆசியால் நன்கு படித்து, நல்ல வேலையில், நல்ல சம்பாத்தியத்துடன் இருக்கின்றனர். இன்றைய பெற்றோர். என்ன நிலைமை? தங்களின் பிள்ளைகளுடன் சேர்ந்து தாமும் ஏதாவது வாசிக்கிற அறிவு, இன்றைய பெற்றொருக்கு நிரம்ப இருக்கிறதே...! ஆனால்... மன்னிக்கவும். பிள்ளைகளை விட, பெற்றோர்தாம் குடும்பங்களைக் கேளிக்கை மையங்களாக மாற்றி வைத்து இருக்கிறார்கள். இன்று, எத்தனை வீடுகளில் இருந்து, சிறுவர்கள் வாய் விட்டு உரக்க படிக்கிற சத்தத்தைக் கேட்க முடிகிறது... தமக்கு வாய்க்காத வசதியும், சுதந்திரமும் தம் பிள்ளைகளுக்குக் கிடைக்கட்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. ஆனால், படிப்பு விஷயத்தில், இந்த தாராளம் வேண்டாமே...!
பிள்ளைகளுக்கு செய்தித் தாள்கள் (நாளிதழ்கள்) வாங்கித்தரலாம்; நூலகங்களுக்கு செல்கிற வழக்கத்தை ஏற்படுத்தலாம்; வீட்டுக்கு உள்ளேயே தரமான விவாதங்களில் ஈடுபடுத்தலாம்; சுயமாக சிந்திக்க, செயல்பட ஊக்குவிக்கலாம்.
இவை எல்லாம் வீட்டில், பெற்றோரும் பிற பெரியவர்களும் செய்ய வேண்டியவை. இது ஒரு குடும்பப் பொறுப்பு என்பதைத் தாண்டி, சமூகக் கடமை.
‘அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயம்’ நம் வீட்டில், நம் குடும்பத்தில், நம் வளர்ப்பில்தான் உருவாகிறது. நாம் அப்படித்தானே வளர்ந்தோம்? நிசந்தானே..?
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி