‘ஹஜ்’ பயணிகளுக்கு மானியம் வழங்குவதை ரத்து செய்யக்கூடாது

‘ஹஜ்’ பயணிகளுக்கு மானியம் வழங்குவதை ரத்து செய்யக்கூடாது எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி பேட்டி

Update: 2018-01-18 22:30 GMT
திருச்சி,

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு மகாலில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அந்த கட்சியின் மாநில தலைவர் தெகலான்பாகவி நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரியில் 15 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடக்கோரி வருகிற 27-ந் தேதி 5 மாவட்டங்களில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு அளிக்கிறது. ஆண்டாள் குறித்து கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக விமர்சனங்கள், மிரட்டல்கள் விடுக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் வன்முறை கலாசாரத்தை உருவாக்க ஒரு கூட்டம் முயற்சிக்கிறது. இதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. பிப்ரவரி மாதம் 10-ந் தேதி திருச்சியில் எங்கள் கட்சியின் வக்கீல்கள் அணி மாநாடு நடக்கிறது. ரெயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். ‘ஹஜ்’ பயணிகளுக்கு மானியத்தை ரத்து செய்யக்கூடாது. முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தை கொண்டு வர மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. இது பெண்களுக்கு பாதுகாப்பானது என்ற தவறான கருத்தை முன்வைக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் எங்கள் கட்சி சார்பில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் போராட்டத்தை பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடத்த உள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். அப்படி நடத்தும் பட்சத்தில் நாங்கள் 100 இடங்களில் போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நிஜாம், மாநில துணைத்தலைவர் அம்ஜத்பாஷா, மாநில செயலாளர்கள் உமர்பாரூக், ரத்தினம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்