பெங்களூருவில் பிரபல கன்னட நடிகர் காசிநாத் மரணம் திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்

பெங்களூருவில் பிரபல கன்னட திரைப்பட நடிகர் காசிநாத் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கன்னட திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

Update: 2018-01-18 21:30 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் பிரபல கன்னட திரைப்பட நடிகர் காசிநாத் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கன்னட திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

திரைப்பட நடிகர் மரணம்

பிரபல கன்னட திரைப்பட நடிகர் காசிநாத் (வயது 67). இவர் சுமார் 43 கன்னட திரைப்படங்களில் நடிகராகநடித்துள்ளார். பல்வேறு படங்களையும் தயாரித்து இருக்கிறார். இவர் பெங்களூரு ஜெயநகரில் வசித்து வந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை அடுத்து அவர் நேற்று காலை 8 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ‘அமர மதுர பிரேம‘, ‘அனுபவ, அனாமிக‘, ‘அவளே நன்னட ஹென்டதி‘ ‘லவ் மாடி நோடு‘, ‘கலியுக கிருஷ்ணா‘, ‘சிங்காரி‘, ‘பங்காரி‘ ‘பங்காரத மனே‘ ஹென்டதி ஹீகே இரபேக்கு‘ உள்பட 43 படங்களில் நடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்த ‘சவுகி‘ படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. கன்னடத்தில் அபூருபத வெக்திகளு, அபரிசித, அனுபவ உள்ளிட்ட 13 படங்களும், இந்தியில் 2, தெலுங்கில் ஒரு படத்தையும் அவர் இயக்கியுள்ளார்.

தலைவர்கள் இரங்கல்


நடிகர் காசிநாத் மறைவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, ஜனதா தளம்(எஸ்) கட்சி தேசிய தலைவர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக காசிநாத்தின் உடல் பசவனகுடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

நடிகர்கள் உபேந்திரா, சிவராஜ்குமார், தர்ஷன், யஷ், நடிகைகள் உமாஸ்ரீ, அபிநயா உள்பட கன்னட திரையுலகினர் ஏராளமானவர்கள் நேரில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று மாலையில் அவரது உடல் சாம்ராஜ்பேட்டையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

உபேந்திராவை அறிமுகப்படுத்தியவர்

காசிநாத் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கன்னட திரைத்துறையில் தனக்கு என்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டார். 2 படங்களுக்கு வசனமும் எழுதினார். கன்னடம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படத்திற்கு இசை அமைத்தார். பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

மேலும் இவர் நடிகர்கள் உபேந்திரா, குமார் கோவிந்த், இசை அமைப்பாளர் மனோகர், இயக்குனர் சுனில்குமார் ஆகியோரை கன்னட திரையுலகில் அறிமுகம் செய்தவர். நடிகைகள் உமாஸ்ரீ, அபிநயா ஆகியோரை அறிமுகம் செய்து தனது திரைப்படங்களில் அதிகமான வாய்ப்புகளை வழங்கியவர். 1980-ம் ஆண்டுகளில் ‘அமர மதுர பிரேம‘ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான காசிநாத், சமூக அக்கறை உள்ள படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்