அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

தஞ்சை மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கலெக்டர் அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-01-18 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சை மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தையும், உள்நாட்டின் மாட்டினங்களை பாதுகாக்கும் நிகழ்ச்சியாகும். காளைகளுக்கு தேவையற்ற துன்புறுத்தலை தடுக்கவும், வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் ஜல்லிக்கட்டு அரசு விதிமுறைகளின்படி நடத்தப்பட வேண்டும். அரசால் அங்கீகாரம் பெறப்பட்ட இடங்களில் மட்டும் தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும். மீறியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

விழிப்புணர்வு

ஜல்லிக்கட்டு அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் கலெக்டரின் முன் அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்ற பின்னரே நடத்தப்படவேண்டும். தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு மாதாக்கோட்டை, நாஞ்சிக்கோட்டை, பூதலூர், பூக்கொல்லை, நீலகிரி, ரெட்டிபாளையம், ராமநாதபுரம், மின்னாத்தூர், குருங்குளம் மேற்கு, திருக்கானூர்பட்டி, வல்லம் மேற்கு, மானோஜிப்பட்டி தெற்கு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு நடத்துபவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தி மிருகவதை சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி திறந்தவெளியில் மட்டுமே நடத்த வேண்டும். காளைகள் கட்டும் பகுதி, காளைகள் உடல் தகுதி பரிசோதனை பகுதி, காளைகள் தழுவும் பகுதி, காளைகள் ஓடுபாதை, காளைகள் அடைபடும் பகுதி, பார்வையாளர் பகுதி போன்ற வசதிகள் கண்டிப்பாக செய்யப்பட வேண்டும்.

துன்புறுத்த கூடாது

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மாடுபிடி வீரர்களுக்கு எண்களுடன் கூடிய சீருடை வழங்க வேண்டும். மாடு பிடி வீரர்கள் உடல் தகுதி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு காளையை ஒரு வீரர் மட்டுமே தழுவுதல் வேண்டும். மாடுபிடி வீரர்கள் காளையின் கொம்புகளையோ, வால் பகுதியையோ, பிடிக்கவோ இதர வகையில் காளைகளை துன்புறுத்தவோ கூடாது. காளைகள் ஓடுபாதையை மறைத்து நிற்கக் கூடாது. ஜல்லிக்கட்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே நடைபெறுவதற்கு அனுமதிக்கப்படும்.

ஆயுதங்கள்

பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளை தவிர இதர இடங்களில் பார்வையாளர்கள் தவிர்க்க வேண்டும். ஓடி வரும் காளைகளையோ ஓடி முடித்த காளைகளையோ தொடுதல் மற்றும் துன்புறுத்தல் செய்ய கூடாது. நிகழ்ச்சியை காண வரும் போது போதை பொருட்கள் உட்கொண்டு வருபவர்கள், கம்பு கூர்மையான ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டு வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு சிறந்த முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற அனைவரும் முழுஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணியன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகேசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்