புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-01-18 23:00 GMT
மயிலாடுதுறை,

தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் மயிலாடுதுறை நகரில் இருந்த அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனால் மதுக்கடைகள் இல்லாத நகரமாக மயிலாடுதுறை இருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை அருகே சித்தர்க்காடு பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டது. தற்போது மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையில் நரிகுறவர் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு அருகே புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று பல்லவராயன்பேட்டை மெயின்ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மயிலாடுதுறை-மணல்மேடு சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

மேலும் செய்திகள்