கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை அசோக்நகர் 9-வது அவென்யூவில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் புவனேஸ்வரி(வயது 33). இவர் நேற்று தனது 2 குழந்தைகளுடன் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர், அலுவலகத்தின் நுழைவுவாயில் அருகே திடீரென பையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து குழந்தைகள் மீதும், தனது உடலிலும் ஊற்றினார். பின்னர் அவர் தீக்குளிக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் புவனேஸ்வரியிடம் வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரக்குமார் விசாரணை நடத்தினார். அப்போது புவனேஸ்வரி கூறுகையில், ‘எனது கணவர் கார்த்திகேயன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தற்போது அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். என்னையும், எனது குழந்தைகளையும் தவிக்கவிட்டு விட்டார். இதுதொடர்பாக அசோக்நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விரக்தியில் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தேன்’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து புவனேஸ்வரியின் புகார் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி அசோக் நகர் மகளிர் போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் கமிஷனர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.