தமிழக மருத்துவ மாணவரின் மரணம் குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும் வைகோ பேட்டி

தமிழக மருத்துவ மாணவரின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என வைகோ கூறினார்.

Update: 2018-01-18 23:00 GMT
புதுக்கோட்டை,

தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு உயர் மருத்துவ படிப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. தமிழக மருத்துவ மாணவர் சரத்பிரபு டெல்லியில் மரணம் அடைந்தது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். ஒரு மருத்துவ இடம் காலியாகிறது என நினைத்து சிலர் இப்படி செய்கிறார்களா? என்பது குறித்தும் விசாரணை செய்ய வேண்டும். இது குறித்து தமிழக அரசு வாய் திறக்காமல் மவுனம் சாதிப்பதோடு, கவலைப்படாமல் இருப்பது மனவேதனை அளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது.

ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் காலையில் ஒன்று, மாலையில் ஒன்று பேசுகிறார். இருப்பினும் 24 மணி நேரமும் ஜெயலலிதாவோடு இருந்தவர் சசிகலா. இதுகுறித்து அவர் தான் பதில் கூற முடியும். ஹஜ் புனித யாத்திரைக்கு மானியத்தை ரத்து செய்து உள்ள மத்திய அரசு இஸ்லாமியர்களின் உணர்வை புறம் தள்ளி உள்ளது.

ஏற்கனவே முத்தலாக் விவகாரத்திலும் சரி, தற்போது ஹஜ் புனித பயண மானிய ரத்து விவகாரத்திலும் இஸ்லாமிய மத தலைவர்களோடு கலந்து ஆலோசிக்காமல் இவ்வாறு செய்து உள்ளது கண்டிக்கத்தக்கது. இதற்கு மாற்று ஏற்பாட்டை மத்திய அரசு செய்து இருக்க வேண்டும்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நான் 54 ஆண்டுகளாக அரசியலில் இருந்தும் கோடிக்கணக்கான மக்களை சந்தித்து உள்ளேன். ஆனால் தற்போது மாற்றத்தை கொண்டு வருவேன் என்று ரஜினி மற்றும் கமல் தெரிவித்து அரசியலுக்கு வருகின்றனர். இது குறித்து காலமும் மக்களும் தான் பதில் சொல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வைகோ நேற்று மாலை திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றார். அப்போது விமானநிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு நம்மை வஞ்சிக்கிறது. அதற்கு மத்திய அரசு துணைபோகிறது. காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாய சங்கங்கள் இணைந்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளனர். இது தொடர்பாக என்னையும் சந்திக்க இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அவர்களை நான் சந்திப்பேன். அனைத்து விவசாய சங்கங்கள் இணைந்து எடுக்கும் நடவடிக்கையில் ம.தி.மு.க. பங்கேற்கும். கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக நான் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தினால் அது டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். டெல்டா பாலைவனமாக மாறும் அபாயம் உருவாகும். தமிழகத்தின் வாழ்வாதாரத்துக்கே பெரும் கேடு வரக்கூடிய நிலை ஏற்படும். நீட் பிரச்சினையில் தமிழகத்துக்கு மிகப்பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்து உள்ளது. தற்போது இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பது மத்திய அரசின் போக்காக இருக்கிறது. அதற்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். மதவாத அரசியல் ஒருபோதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்