திருச்செந்தூர் -பாலக்காடு பாசஞ்சர் ரெயில் கோவை வழியாக இயக்கப்படுமா? தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

திருச்செந்தூர் -பாலக்காடு பாசஞ்சர் ரெயில் கோவை வழியாக இயக்கப்பட வேண்டும் என்று தென் மாவட்ட ரெயில் பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2018-01-18 20:45 GMT
நெல்லை,

திருச்செந்தூர் -பாலக்காடு பாசஞ்சர் ரெயில் கோவை வழியாக இயக்கப்பட வேண்டும் என்று தென் மாவட்ட ரெயில் பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பாசஞ்சர் ரெயில்

மதுரை -கோவை இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி நடைபெற்றது. இந்த பணி படிப்படியாக முடிக்கப்பட்டது. மதுரையில் இருந்து ஒட்டன்சத்திரம், பழனி வரை அகல ரெயில் பாதை முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு தயார் செய்யப்பட்ட உடன், திருச்செந்தூரில் இருந்து நெல்லை வழியாக பழனிக்கு பாசஞ்சர் ரெயில் புதிதாக இயக்கப்பட்டது.

இந்த வழித்தடம் பழனியில் இருந்து பொள்ளாச்சி வரை அமைக்கப்பட்ட பிறகு திருச்செந்தூர் -பழனி ரெயில் பொள்ளாச்சி வரை நீட்டிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து கோவை வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. எனவே இந்த பணி முடிக்கப்பட்டு திருச்செந்தூர் -பொள்ளாச்சி பாசஞ்சர் ரெயில் கோவை வழியாக இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெயில்வே துறையை சேர்ந்த ஒருசிலரின் முயற்சியால் இந்த ரெயில் தற்காலிகமாக பொள்ளாச்சியில் இருந்து நேரடியாக கேரளா மாநிலம் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டது.

பயண நேரம் குறையும்

இதனால் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கோவையில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அங்கு வியாபாரம், தொழில் செய்தும், தனியார் நிறுவனங்களில் வேலை செய்தும் வருகின்றனர். அவர்களுக்கு தற்போது நெல்லை வழியாக நாகர்கோவில் -கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பாசஞ்சர் ரெயில் என 2 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரெயில் திண்டுக்கல்லை கடந்து கரூர், ஈரோடு வழியாக நீண்ட தூரம் சுற்றி செல்கிறது. ஆனால் திண்டுக்கல்லில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு சென்றால் பயண நேரமும், கட்டணமும் குறையும். மேலும் தற்போதுள்ள கோவை ரெயில்களில் பயணிகள் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.

இதை தவிர்க்கும் வகையில் திருச்செந்தூர் -பொள்ளாச்சி ரெயிலை பாலக்காட்டுக்கு நீட்டிக்காமல், கோவைக்கு நீட்டித்து இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் பொள்ளாச்சி -கோவை இடையே அகல ரெயில் பாதை பணி முடிக்கப்பட்ட பிறகு இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

கோவைக்கு நீட்டிக்கப்படுமா?

இந்த நிலையில் பொள்ளாச்சி -கோவை இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் மதுரையில் இருந்து கோவைக்கு பாசஞ்சர் ரெயில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், திருச்செந்தூர் -பாலக்காடு ரெயில் வழித்தடம் பெரும்பாலான பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.

எனவே, திருச்செந்தூர் -பாலக்காடு பாசஞ்சர் ரெயிலை கோவை வழியாக இயக்க வேண்டும் என்பது தென் மாவட்ட பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதை மாற்ற முடியாவிட்டால் இதே வழித்தடத்தில் திருச்செந்தூரில் இருந்து கோவைக்கு எக்ஸ்பிரஸ் அல்லது பாசஞ்சர் ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்