அரசு பணியில் ஆதரவற்றவர்களுக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீடு மராட்டிய மந்திரிசபை ஒப்புதல்

அரசு பணியில் ஆதரவற்றவர்களுக்கு பொது பிரிவின்கீழ், 1 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க மராட்டிய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

Update: 2018-01-17 22:30 GMT
மும்பை,

அரசு பணியில் ஆதரவற்றவர்களுக்கு பொது பிரிவின்கீழ், 1 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க மராட்டிய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

மந்திரிசபை ஒப்புதல்

தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகள் ஆதரவு இல்லம் வாயிலாக கல்வி பயின்று வெளியே வருகின்றனர். அவர்களது சாதி பெயர் தெரியாததால், அவர்கள் சிறப்பு பிரிவின்கீழ், அரசு பணியில் இட ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, ஆதரவற்றவர்களுக்கு அரசு பணியில் பொது பிரிவின்கீழ், 1 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் ஆதரவற்ற நபர்கள், அரசு வேலை மட்டுமின்றி பிற சலுகைகளையும் அனுபவிக்கலாம்.

இதுபற்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி பங்கஜா முண்டே மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆதரவற்றவர்களுக்கு மறுவாழ்வு

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வெளியே வந்ததும், அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. அவர்களது சாதி பெயர் தெரியாததால் அவர்களை சிறப்பு பிரிவில் சேர்க்க முடியாது. இதன் காரணமாக கல்வி, பொருளாதார மற்றும் சமூக சலுகைகளை பெற முடியாமல், ஒடுக்கப் பட்டனர். இந்தநிலையில், மந்திரிசபையின் இந்த முடிவு ஆதரவற்ற குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதுடன், அவர்களது எதிர்காலத்தையும் காக்கும்.

இவ்வாறு பங்கஜா முண்டே தெரிவித்தார்.

மேலும், வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் கிராம பஞ்சாயத்துகளுக்கு மக்கள்தொகை அடிப்படையில் நிதியுதவி அளிக்கவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அத்துடன், கோலாப்பூர் விமான நிலையத்துக்கு சத்ரபதி ராஜாராம் மகாராஜ் பெயர் சூட்டவும் மந்திரிசபை முடிவு எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்