நலிந்து வரும் உப்பு தயாரிப்பு தொழிலால் தொழிலாளர்கள் வேலை இழப்பு, வறுமையில் வாடுவதாக வேதனை

நலிந்து வரும் உப்பு தயாரிப்பு தொழிலால் வேலை இழந்து வறுமையில் வாடுவதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.;

Update: 2018-01-17 22:15 GMT
மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே இடையன்சாவடி, வல்லூர், அத்திப்பட்டு, வாயலூர், காட்டூர், கட ப்பாக்கம், சிறுபழவேற்காடு, தாங்கல், பெரும்புலம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் வங்கக்கடல், பக்கிங்காம் கால்வாய், உப்புநீர் பகுதி அருகே அமைந்து உள்ளன.

இயற்கையாகவே இவை மூன்றும் இந்த பகுதியில் ஒன்றாகவே இணைந்து உள்ளதால் இங்குள்ள தண்ணீர் உவர்ப்பு தன்மை கொண்டதாகவே உள்ளது. இதனால் இங்கு நெற் பயிருக்கு அடுத்த தொழிலாக உப்பு தயாரிக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது.

பல ஆயிரக்கணக்கான நிலங்களில் உப்பு தயாரிக்கப்பட்டு வந்தது. மத்திய அரசின் உப்பு நிறுவனம் மேற்பார்வையில் மாநில உப்பு நிறுவனம் இணைந்து உப்பு தயாரிக்க தேவையான அரசு நிலங்களை தனியாருக்கு நீண்டகால குத்தகைக்கு விட்டு உப்பு தயாரிக்கப்பட்டு வந்தது. இதில் ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இங்கு தயாரிக்கப்படும் உப்பு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தூத்துக்குடிக்கு அடுத்ததாக இங்குதான் உப்பு தயாரிக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது. இங்கு தயாரிக்கப்படும் அடர்வு குறைந்த உப்பு சமையலுக்கும், அடர்வு அதிகமான உப்பு வேதிப்பொருட்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் 1986-ம் ஆண்டு அனல்மின் நிலையம் தொடங்க திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக அத்திப்பட்டு, வல்லூர், எண்ணூர், புழுதிவாக்கம், வாயலூர் ஆகிய பகுதிகளில் உப்பளத்தொழிலுக்காக தமிழக அரசால் நீண்ட கால குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலங்களுக்கான ஒப்பந்தம் படிப்படியாக ரத்து செய்யப்பட்டது.

அத்திப்பட்டு, நெய்தவாயல், வாயலூர் ஆகிய கிராமங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான உப்பு விளை நிலங்கள் வடசென்னை அனல்மின் நிலையம் அமைக்கவும், எண்ணூர் துறைமுகத்துக்கும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் வழங்கியது. மேலும் பொதுமக்களின் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன.

இதனால் உப்பளத்தொழில் நசிவடையத்தொடங்கியது. படிப்படியாக குறைந்து உப்பு தயாரிக்கும் தொழில் காட்டூரை தவிர மற்ற இடங்களில் அறவே நிறுத்தப்பட்டது. இதனால் உப்பு தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்காண ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இன்றும் வறுமையில் தவித்து வருகின்றனர்.

காட்டூரில் மட்டும் 500 ஏக்கரில் உப்பளத்தொழில் நடைபெற்று வருகிறது. அங்கு தயாரிக்கப்படும் உப்பு வேதிப்பொருட்கள் தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இது குறித்து உப்பு தயாரிப்பு தொழிலாளர்கள் கூறியதாவது:-

அத்திப்பட்டு, குருவிமேடு, மவுத்தம்பேடு, கொரஞ்சூர், தில்லை ஆகிய இடங்களை சேர்ந்த 250 குடும்பங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் உப்பு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தோம். ஆனால் அரசு உப்பளத் தொழில் நடைபெறும் நிலங்களை அனல்மின் நிலையம் தொடங்க வழங்கி விட்டதால் உப்பு தயாரிப்பு தொழில் நசிவடைந்தது.

ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடைபெற்று வந்த இந்த தொழில், தற்போது 500 ஏக்கருக்குள் சுருங்கி விட்டது. நலிந்து வரும் இந்த தொழிலால் மேலும் பலர் வேலையை இழந்து வேறு தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

வேலை இழந்த உப்பளத் தொழிலாளர்களுக்கு வடசென்னை அனல்மின் நிலையம், வல்லூர் தேசிய அனல்மின் நிலையம், எண்ணூர் துறைமுகம், இந்துஸ்தான் பெட்ரோலிய கழகம் உள்பட தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் அரசுக்கு சொந்தமான உப்பளத்தொழில் நடைபெற்று வந்த நிலங்களை பெற்று செயல்பட்டுவரும் நிறுவனங்களில் வேலை வழங்க மத்திய அரசின் உப்பு நிறுவனத்தின் துணை ஆணையர் பரிந்துரை செய்தார்.

ஆனால் இதுவரையில் எங்களுக்கு எந்த நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் வேலை இழந்த உப்பளத்தொழிலாளர்களின் குடும்பங்கள் வருமானம் இன்றி வறுமையில் வாடும் நிலை காணப்படுகிறது.

நலிந்து வரும் உப்பு தொழிலை காப்பாற்றவும், வேலை இழந்து வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்