மேலூர் அருகே அரிட்டாபட்டி மலையில் 167 அரியவகை பறவைகள் கண்டுபிடிப்பு

மேலூர் அருகே அரிட்டாபட்டியில் உலகிலேயே அதிவேகமாக பறக்கும் சிவப்பு வல்லூறு உள்பட 167 அரியவகை பறவைகள் உள்ளன என்று பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

Update: 2018-01-17 21:45 GMT
மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே 7 மலைகளின் அடிவாரத்தில் உள்ளது அரிட்டாபட்டி கிராமம். இங்குள்ள மலைகளில் வேறெங்கும் காணப்படாத அரியவகை பறவைகளும், பழமையான மனிதர்கள் வாழ்ந்த இடங்களும், கல்வெட்டு எழுத்துகளும், சிற்பங்களும் உள்ளன. இவற்றை பாதுகாக்க கடந்த 2014-ம் ஆண்டில் 7 மலைகள் பாதுகாப்பு குழு இந்த கிராம மக்களால் அமைக்கப்பட்டது. இதன் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் குழுவினர் உதவியுடன் உலக அளவில் இருந்து இங்கு வரும் பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் இந்த மலைகளில் வசிக்கும் அரியவகை பறவைகளை கண்டுபிடித்தும் அவற்றை கணக்கிட்டும் வருகின்றனர்.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த அம்மோல், சென்னை சேரன், திருச்சி பாலபாரதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் கடந்த 2 நாட்களாக இந்த மலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உலக அளவில் அதிவேகமாக பறக்கும் சிவப்பு வல்லூறு மற்றும் ராஜஸ்தானில் மட்டுமே வாழும் பறவைகளும் இங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:- அரிட்டாபட்டியில் உள்ள மலைகள் பறவைகள் மிகவும் பாதுகாப்பாக வாழ ஏற்ற இடமாக அமைந்துள்ளன. இதனால் இங்கு உலக அளவிலான அரியவகை பறவைகள் அதிக அளவில் வசிக்கின்றன. இவற்றை கடந்த பல ஆண்டுகளாக உலகஅளவிலான பறவை ஆராய்ச்சியாளர்கள் தொடர்புகொண்டு தொடர்ச்சியாக இங்குவந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

வெகுதொலைவு தூரம் பார்க்கும் திறனும் அதிவேகமாக பறக்கும் பறவைகள் உள்ளன எங்களை கண்டவுடன் அவைபறந்தன. இருப்பினும் நீண்டநேரம் அசைவின்றி காத்துக்கிடந்து நவீன கேமராக்களின் உதவியுடன் அரியவகை பறவைகளை கண்டுபிடித்து கணக்கிட்டு வருகிறோம். லெகர்பால்கென், சிவப்புவல்லூறு, ராஜாளிகழுகு, தேன்பருந்து, குட்டைகால் பாம்புத்திண்ணி, வெள்ளை கண்வைரி, இந்தியன் ஸ்பாடேடு கழுகு உள்ளிட்ட 167 அரியவகை பறவைகள் இங்கு இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் அதிக பறவைகள் இருக்கின்றன. அவற்றையும் கண்டுபிடிக்க தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு தெரிவித்தனர்.

அரிட்டாபட்டியில் உள்ள ஏழு மலைகளை பறவைகள் சரணாலயமாக அரசு அறிவித்து அரியவகை பறவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பறவைகள் ஆராய்ச்சியாளர்களும் கிராம மக்களும் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்