4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-17 22:45 GMT
நாமக்கல்,

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு புதுச்சேரி அரசு வழங்குவது போல இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியத்தை வழங்கி, காலமுறை ஊதியத்திற்குள் கொண்டு வர வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கண்ணகி தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் சிந்தாமணி, கிருஷ்ணவேணி, துளசிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு 1.1.2016 முதல் ஊதியக்குழு நிலுவை தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும். மே மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பூங்கொடி நன்றி கூறினார்.

தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கேயே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பூங்கா சாலையில் போக்குவரத்தை தடை செய்தனர். இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன. மதியம் 1 மணிக்கு தர்ணா போராட்டம் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கம்போல் பூங்கா சாலையில் போக்குவரத்து நடைபெற்றது.

மேலும் செய்திகள்