தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை - டாக்டர் சரவணன் தந்தை பேட்டி

டெல்லி மருத்துவ கல்லூரியில் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2018-01-17 23:00 GMT
திருப்பூர்,

 டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவன் சரத்பிரபு இறப்பு குறித்து தகவல் அறிந்ததும், கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மர்மமான முறையில் இறந்த டாக்டர் சரவணனின் தந்தை கணேசன் துக்கம் விசாரிப்பதற்காக அங்கு வந்தார். அவர் சரத்பிரபுவின் உறவினர்களை சந்தித்து பேசிவிட்டு, தனது வருத்தத்தையும் தெரிவித்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி எனது மகன் சரவணன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி விடுதி அறையில் இறந்து கிடந்தார். இதை விசாரித்த டெல்லி போலீசார் எனது மகனின் இறப்பை தற்கொலை என்று பதிவு செய்தனர். ஆனால், கோர்ட்டு விசாரணையில் என்னுடைய மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்து விட்டதாக தெரியவந்துள்ளது. ஆனால் இதுவரை எனது மகனின் இறப்பிலும் உரிய நியாயம் கிடைக்கப்படவில்லை. இதில் போலீசாரின் ஒத்துழைப்பு என்பது முற்றிலும் இல்லாமலேயே இருக்கிறது. இது போலவே சரத்பிரபுவின் மரணமும் உள்ளது. மர்மமான முறையில் அறையில் இறந்து கிடந்துள்ளார். தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். தமிழக அரசு இதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த நிலை தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்