திருப்பூரில் குடும்ப பிரச்சினை காரணமாக அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூரில் குடும்ப பிரச்சினை காரணமாக அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-01-17 21:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் செங்குந்தபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 42). இவர் பனியன் நிறுவன தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா(36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 2-வது குழந்தைக்கு 11 மாதமே ஆகிறது.

அமுதா கல்லாங்காடு திருக்குமரன் நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். செந்தில்குமாருக்கும், அமுதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில்குமாரின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிக்க செல்வது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக அமுதா வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையிலேயே காணப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமுதா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் இதுகுறித்து உடனடியாக திருப்பூர் மத்திய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்