தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் குறைந்த மிதவை ஆழம் கொண்ட புதிய கப்பல் தளம் கட்ட ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் குறைந்த மிதவை ஆழம் கொண்ட கப்பல் தளம் கட்டுவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Update: 2018-01-17 21:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் குறைந்த மிதவை ஆழம் கொண்ட கப்பல் தளம் கட்டுவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதிய கப்பல் தளம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம், பொது, தனியார் பங்களிப்புடன் கட்டுமான மூலப்பொருட்கள் கையாளுவதற்கான வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் குறைந்த மிதவை ஆழம் கொண்ட புதிய கப்பல் தளத்தை அமைக்க உள்ளது. இந்த கப்பல்தளம் ரூ.65 கோடியே 37 லட்சம் மதிப்பில் அமைக்கப்படுகிறது.

இந்த கப்பல் தளத்தின் கொள்ளளவு ஆண்டுக்கு சுமார் 2 மில்லியன் டன் ஆகும். இந்த தளம் 260 மீட்டர் நீளம் மற்றும் 30 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். சரக்குகளை கையாளுவதற்கும், சேமித்து வைப்பதற்கும் 2.5 எக்டர் நில பரப்பை துறைமுகம் வழங்கி உள்ளது. மேலும் 10.3 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட இந்த தளத்தில் 25 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட கப்பல்களை கையாள முடியும்.

ஒப்பந்தம்

இந்த கப்பல் தளம் அமைப்பதற்கான சலுகை ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஜெயக்குமார், வி.ஜே.ஆர். துறைமுக முனையம் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர் ஜெகதீசன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் துறைமுக தலைமை பொறியாளர் சுரேஷ் எஸ்.பி.பாட்டில், ஞானராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கப்பல் தளம் கட்டுமான பணிகளை வி.ஜே.ஆர். துறைமுக முனையம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இந்த நிறுவனம் மொத்த வருவாயில் 36.01 சதவீதத்தை துறைமுகத்துக்கு வழங்க உள்ளது. ஒப்பந்தம் கையெழுத்திட்ட நாளில் இருந்து 3 மாதத்துக்குள் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 18-வது மாதத்தில் வர்த்தக செயல்பாடுகள் தொடங்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்