டீக்கடைக்காரரை கொலை செய்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

திசையன்விளையில், டீக்கடைக்காரரை கொலை செய்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2018-01-17 20:30 GMT
நெல்லை,

திசையன்விளையில், டீக்கடைக்காரரை கொலை செய்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

டீக்கடைக்காரர் கொலை

நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூர் பவுண்ட் தெருவை சேர்ந்தவர் பெருமாள்(வயது 51). இவர் திசையன்விளையில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கும், திசையன்விளை வணிக வைசியர் தெருவை சேர்ந்த சுப்பையா குடும்பத்தினருக்கும் பொதுக்குழாயில் குடிதண்ணீர் பிடிப்பது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 3.11.2014 அன்று பெருமாள், பொதுக்குழாயில் குடிதண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தார். அப்போது பெருமாளுக்கும் சுப்பையா குடும்பத்தினருக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுப்பையா, அவருடைய மகன் அய்யப்பன்(24) மற்றும் அதே ஊரை சேர்ந்த செல்லப்பா மகன் சுடலை சேகர் என்ற சுதாகர்(24) ஆகிய 3 பேரும் சேர்ந்து, பெருமாளை அடித்து உதைத்து, கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

ஆயுள் தண்டனை

இது குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுப்பையா, அய்யப்பன், சுடலை சேகர் ஆகிய 3 பேரையும் கைது செய்து நெல்லை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயராஜ் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட அய்யப்பன், சுடலைசேகர் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். சுப்பையா மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்தார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ராமமூர்த்தி ஆஜரானார்.

மேலும் செய்திகள்