பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்தூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

Update: 2018-01-17 22:45 GMT
மத்தூர்,

மத்தூர் அருகே ஒட்டப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு பழைய ஒட்டப்பட்டி, புது ஒட்டப்பட்டி என 2 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இதில் ஒரே சமுதாய இரு உட்பிரிவு மக்கள் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் அந்த பகுதியில் மாடுகளை ஓடவிடும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நேரம் இரு தரப்பை சேர்ந்தவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதில் புது ஒட்டப்பட்டியைச் சேர்ந்த ராமஜெயம் என்பவரின் மனைவி லட்சுமி (30) தாக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து லட்சுமி தரப்பில் மத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில் தன்னை வரதன் (55), பெருமாள் (23), வாமணி (25), அஜித்குமார் (23), செல்வகுமார் (23), மணி (23) உள்பட 15 பேர் சேர்ந்து தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் லட்சுமியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிஅந்த பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர், லட்சுமியின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதில் தொடர்புடைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்