தனிக்கட்சி பற்றி இன்று முடிவு - டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுப்பேன்.தனிக்கட்சி தொடங்குவது பற்றி இன்று முடிவு செய்யப்படும் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2018-01-17 00:00 GMT
புதுச்சேரி,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பொம்மையார்பாளையம் கிராமத்தில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ.வுக்கு 100 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. தனது குடும்பத்தினருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பண்ணை வீட்டிற்கு வந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

இங்கிருந்து நேற்று காலை அவர் ஊட்டி புறப்பட்டு சென்றார். அப்போது திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனிக் கட்சி தொடங்குவதற்கு எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படுவேன். தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக எம்.ஜி.ஆர். பிறந்த நாளான நாளை(இன்று புதன்கிழமை) முடிவு செய்வோம். தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெறும்.

இந்த ஆட்சி 2 மாத காலத்தில் முடிவுக்கு வரும். 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வரும்.

இரட்டை இலை சின்னம் தவறானவர்கள் கையில் சிக்கியுள்ளது. அ.தி.மு.க. சட்ட திட்டத்தின்படி பெரும்பான்மையான தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்கள் என பார்க்காமல் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியதற்கு ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் எனக்கு வெற்றியை தந்து தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு தவறு என நிரூபித்து உள்ளனர்.

1½ கோடி தொண்டர்களின் எண்ணத்தை ஆர்.கே. நகர் மக்கள் பிரதிபலித்துள்ளனர். எனது வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் பணம் கொடுத்து வெற்றி பெற்று விட்டதாக கூறி ஆர்.கே. நகர் மக்களை தாழ்த்தி பேசி வருகின்றனர். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்