கடலூர் முதுநகர் அருகே இருதரப்பினர் மோதல்; வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் போலீஸ் குவிப்பு

கடலூர் முதுநகர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டன. வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2018-01-16 22:30 GMT
கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அடுத்த ஏணிக்காரன்தோட்டம் மாரியம்மன்கோவில் அருகே அப்பகுதியை சேர்ந்த சிலர் கும்பலாக அமர்ந்திருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற மற்றொரு தரப்பை சேர்ந்த சிலருக்கும், கோவில் முன்பு அமர்ந்திருந்தவர்களுக்கும் இடையே திடீரென வாய்த் தகராறு ஏற்பட்டது. இது முற்றி ஒருவருக்கொருவர் நெட்டித்தள்ளிக் கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், ஏணிக்காரன்தோட்டம் பகுதிக்கு வந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள், ஆட்டோ, மினிலாரி ஆகிய வாகனங்களின் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும், அந்த பகுதியில் உள்ள வீடுகள் மீது கற்களை வீசினர். இதில் வீட்டிற்குள் கற்கள் விழுந்ததில் சில வீடுகளில் இருந்த பொருட்கள் சேதமாகின. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டனர். இதையடுத்து அங்கு இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இது பற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் கல்வீச்சில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தலைமறைவானது. இந்த நிலையில் ஏணிக்காரன்தோட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதியில் உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தங்கள் தரப்பினரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கடலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் கடலூர்-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஏணிக்காரன் தோட்டம் ஊர் தலைவர் சரவணன், முதுநகர் சுனாமி நகரை சேர்ந்த முருகன் மகன் முகேஷ் ஆகிய 2 பேரும் கடலூர் முதுநகர் போலீசில் தனித்தனியே புகார் செய்தனர். அதன்பேரில் இரு தரப்பை சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர போக்குவரத்துக்கு இடையூறாக மறியல் செய்ததாக பா.ம.க. மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்