கடனை திருப்பி கேட்ட ஒப்பந்ததாரரை கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய 2 பேர் சிக்கினர்

கடனை திருப்பி கேட்ட ஒப்பந்ததாரரை கொலை செய்து தண்டவாளத்தில் வீசிச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-16 22:15 GMT
வசாய்,

கடனை திருப்பி கேட்ட ஒப்பந்ததாரரை கொலை செய்து தண்டவாளத்தில் வீசிச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தண்டவாளத்தில் உடல் மீட்பு


பால்கர் மாவட்டம் கோல்வாட் ரெயில் நிலையம் அருகே ஆண் உடல் ரெயிலில் அடிபட்டு சிதறி கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பிணமாக மீட்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தகானு சிக்லே கிராமத்தை சேர்ந்த வண்டேஷ் (வயது44) என்பதும், ஒப்பந்ததாரர் என்பதும் தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து போலீசார் இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ரோகன் என்ற மீனவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தான், தனது நண்பர் பிரதீப்புடன் சேர்ந்து வண்டேசை கொலை செய்தது தெரியவந்தது.

ரோகன் ஒப்பந்ததாரர் வண்டேசிடம் ரூ.12 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. எனவே வண்டேஷ் கடனை திருப்பி கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரோகன் சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி அவரை குட்காடி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வைத்து அவர், நண்பர் பிரதீப்புடன் சேர்ந்து வண்டேசை அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளனர். இதையடுத்து போலீசார் ரோகன், பிரதீப்பை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்