கமலா மில் தீ விபத்து சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ‘மோஜோ’ ஓட்டல் உரிமையாளர் போலீசில் சரண்

கமலா மில் தீ விபத்து சம்பவத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மோஜோ ஓட்டலின் மற்றொரு உரிமையாளர் நேற்று போலீசில் சரண் அடைந்தார்.

Update: 2018-01-16 22:15 GMT
மும்பை,

கமலா மில் தீ விபத்து சம்பவத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மோஜோ ஓட்டலின் மற்றொரு உரிமையாளர் நேற்று போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கமலா மில் தீ விபத்து


மும்பை கமலா மில் வளாகத்தில் கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த தீ விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்திற்கு காரணமாக இருந்த ஒன்அபோவ் ஓட்டல் உரிமையாளர்கள் அப்ஜித், கிரிபேஷ், ஜிகர் மற்றும் மோஜோ ஓட்டல் உரிமையாளரான புனே முன்னாள் போலீஸ் கமிஷனர் கே.கே.பதக்கின் மகன் யுக் பதக் ஆகியோரை கைது செய்து இருந்தனர்.

தலைமறைவாக இருந்தவர் கைது


இதில், மோஜோ ஓட்டலின் மற்றொரு உரிமையாளர் யுக் துல்லி (வயது39) மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். எனவே அவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் அவர் நேற்று காலை என்.எம். ஜோஷி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனா.

பின்னர் அவர் மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை 20-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

மேலும் செய்திகள்