தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.;

Update:2018-01-17 04:00 IST
தூத்துக்குடி,

ஆடி மற்றும் தை அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் முன்னேற்றம் தரும் என்று கூறப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த தை அமாவாசை நிகழ்ச்சி நேற்று நடந்தது. தை அமாவாசையையொட்டி நேற்று காலையில் முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் செய்து வழிபடும் நிகழ்ச்சி தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் நடந்தது. இதனால் காலை முதல் மக்கள் திரளாக கடற்கரைக்கு வந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடினர். அங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.

தை அமாவாசையை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் நேற்று ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர். தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், அங்கு பெரிய டிரம்களில் தண்ணீர் நிரப்பி வைத்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதேபோன்று கயத்தாறு அகிலாண்ட ஈசுவரி அம்மன் சமேத கோதண்ட ராமேசுவரர் ஆலயம் முன்பும் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ராமர் தீர்த்தத்தில் புனித நீராடினர்.

இதேபோன்று மாவட்டத்தின் கடலோர பகுதிகள், ஆற்றங்கரையோர பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான மக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மேலும் செய்திகள்