தரிகெரேயில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர் கைது

தரிகெரேயில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-01-16 21:00 GMT
சிக்கமகளூரு,

தரிகெரேயில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை உத்தரவின்பேரில் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாலியல் தொல்லை

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கேரளாவை சேர்ந்த மாணவி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த கல்லூரியில் உடற்கல்வியியல் பேராசிரியராக பணியாற்றி வருபவர் குமாரசாமி. இந்த நிலையில் கடந்த மாதம் கல்லூரி சார்பில் மாணவ-மாணவிகள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அப்போது குமாரசாமி, கேரள மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து தரிகெரே போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால், பேராசிரியர் அந்தப்பகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருந்ததால், அவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி நேற்று முன்தினம் சிக்கமகளூருவில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து, போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலையை சந்தித்து தனக்கு நடந்த கொடுமை பற்றி புகார் தெரிவித்துள்ளார். மேலும் போலீசாரிடம் புகார் கொடுத்தாலும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். இதனால் கோபம் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, உடனடியாக தரிகெரே போலீஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவர், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் குமாரசாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பேராசிரியர் கைது


போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை உத்தரவின்பேரில் தரிகெரே போலீசார் கல்லூரி பேராசிரியர் குமாரசாமியை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்