செங்கோட்டை- புனலூர் ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

செங்கோட்டை- புனலூர் ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2018-01-16 22:00 GMT
தென்காசி,

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் நலன் கருதி செங்கோட்டை- புனலூர் அகல ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து நெல்லை மாவட்டம் குற்றாலம் சுற்றுலா மாளிகையில் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு நேற்று காலை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாவட்ட மாநாடு கடையநல்லூரில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. மாநாட்டில் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் முன்னிலை வகிக்கிறார். தேசிய பொதுச்செயலாளர் குஞ்ஞாலி குட்டி எம்.பி சிறப்புரை ஆற்றுகிறார். சிறுபான்மையினரின் உரிமைகளை வலியுறுத்தி எல்லா மாவட்டங்களிலும் இந்த மாநாடு நடக்கிறது.மத சார்பற்ற இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தும் ஆளும் பா.ஜ.க அரசுக்கு முடிவு கட்டவும், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான நல்லாட்சி உருவாகவும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி செங்கோட்டை- புனலூர் அகல ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். வார்டுகள் மறுசீரமைப்பு, பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்து சமூக மக்களின் ஆலோசனைகளை பெற்று வார்டுகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். உலகம் போற்றும் கவிஞர் வைரமுத்து கூறிய கருத்தினால் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து அவர் வருத்தம் தெரிவித்த பிறகும் கருத்து சுதந்திரத்தை தடை செய்யும் விதத்தில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தும் இந்துத்துவா சக்திகளை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ கூறினார்.

பேட்டியின்போது மாநில துணை செயலாளர் முகம்மது இஸ்மாயில், மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், தலைமை நிலைய பேச்சாளர் முகம்மது அலி, மாவட்ட இளைஞர் லீக் தலைவர் நவாஸ்கான், புளியங்குடி சாகுல் ஹமீது, தென்காசி நகர செயலாளர் முகம்மது உசேன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்