ஜெயலலிதாவின் சாதனைகளை கொச்சைப்படுத்துவதா? நடராஜனுக்கு கே.பி.முனுசாமி எச்சரிக்கை

ஜெயலலிதாவின் சாதனைகளை கொச்சைப்படுத்தினால் நடராஜன் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எச்சரித்தார்.

Update: 2018-01-16 23:00 GMT
காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க., பொதுச்செயலாளராக பொறுப்பேற்று பல்வேறு சோதனைகளை கடந்து கட்சியை கட்டுக்கோப்பாக வைத்து லட்சக்கணக்கில் இருந்த தொண்டர்களின் எண்ணிக்கையை ஒன்றரை கோடியாக உயர்த்தினார். இதையடுத்து ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்று தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பட்ட மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ள ஜெயலலிதாவின் சாதனைகளை கொச்சைப்படுத்தும் விதமாக சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசியுள்ளார். தேர்தல் அறிக்கையை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பிறகு அதை முறைப்படுத்தி ஜெயலலிதா வெளியிடுவார். இதையடுத்து தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை ஆட்சி பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்தி காட்டியுள்ளார்.

இந்தநிலையில், திட்டங்கள் குறித்து நான்தான் ஜெயலலிதாவுக்கு எழுதி கொடுத்ததாக நடராஜன் கூறியுள்ளது அப்பட்டமான பொய். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர். கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாத நடராஜனை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மற்றும் கவர்னர் சென்னாரெட்டி ஆகியோர் தமிழக முதல்வராக பொறுப்பேற்க அழைப்பு விடுத்ததாக கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது.

சசிகலா குடும்பத்தினர் அனைவரும் குற்றவாளிகள். இவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. கிரிமினல் குடும்பத்தை சேர்ந்த இவர்கள் ஜெயலலிதாவை ஏமாற்றி சொத்துகளை சேர்த்துள்ளனர். இந்தநிலையில் ஜெயலலிதாவின் சாதனைகளை கொச்சைப்படுத்தும் வகையில் நடராஜன் கூறியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த செயலை நடராஜன் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பெரும் பின்விளைவுகளை அ.தி.மு.க. தொண்டர்கள் மூலம் அவர் சந்திக்க நேரிடும்.

தினகரன் சார்பில் வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ ஆதாரத்திற்கு கிருஷ்ணபிரியா கண்டனம் தெரிவித்ததற்கு அவரை கன்னத்தில் அறைவேன் என நடராஜன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் புகழை கொச்சைப்படுத்தும் நடராஜனை எதனால் அடிப்பது.

மேலும், நீதித்துறை, ரிசர்வ் வங்கி குறித்து பேச நடராஜனுக்கு அருகதை இல்லை. அ.தி.மு.க.வை வைத்து நடராஜன் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தால் அதை தொண்டர்கள் தடுத்து நிறுத்துவார்கள். ஜெயலலிதாவின் மரணம் மர்மமாக இருப்பதால் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு தேவையான நிதியை பெறவே தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் டெல்லிக்கு செல்கின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் தேசிய கட்சிகள் ஆட்சி புரிந்து வருகின்றனர். ஆனால் அண்ணாவிற்கு பிறகு தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சி புரிகிறது. தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கமுடியாது. ரஜினி அரசியலுக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும். அதுவரையில் அவர் தாங்குவாரா என்பதை காலம் பதில் சொல்லும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்