ஆவாரங்காட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த வாலிபர் மாடு முட்டி பலி

ஆவாரங்காட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில், வேடிக்கை பார்த்த வாலிபர் ஒருவர் இறந்தார். 3 போலீஸ்காரர்கள் உள்பட 73 பேர் காயமடைந்தனர்.

Update: 2018-01-16 22:45 GMT
மணப்பாறை,

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் அதேநாளில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி ஆவாரங்காட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதன்படி நேற்று ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்த பின்னரே ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள அனுமதித்தனர். இதேபோல் மாடுபிடி வீரர்களையும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.

திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 503 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. இதில் சில காளைகள் மருத்துவ பரிசோதனையில் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, இறுதியாக 485 காளைகள் களம் கண்டன. இதேபோல் பரிசோதனை செய்யப்பட்ட 267 வீரர்களில், 262 பேர் மட்டும் மாடுகளை பிடிக்க களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பாலக்குறிச்சி, கலிங்கபட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த சுமார் 35-க்கும் மேற்பட்ட கோவில் காளைகள் வாடிவாசல் முன்பு நிறுத்தப்பட்டன. பின்னர் ஸ்ரீரங்கம் கோட்டாட்சித் தலைவர் பொன்.ராமர், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சியாஸ் கல்யாண் ஆகியோர் கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கோவில் காளைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் களத்தில் சீறிப்பாய்ந்தன. இதைக்கண்டு மக்கள் ஆரவாரம் செய்தனர். கோவில் காளைகள் என்பதால், அவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன்பிறகு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

ஆக்ரோஷத்துடன் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் ஒரு சில காளைகள் பிடிபட்டன. மற்றவை பிடிபடாமல் ஓடின. சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் கட்டில், பீரோ, சைக்கிள், டி.வி.க்கள், மிக்சி, சில்வர் பாத்திரங்கள், குத்துவிளக்கு, சுவர் கெடிகாரம், பிளாஸ்டிக் பொருட்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், இ.இடையபட்டியை சேர்ந்த சோலைபாண்டி (வயது 28) என்பவரை மாடு ஒன்று கொம்பால் வயிற்றில் குத்தி தூக்கி வீசியது. இதில் குடல் சரிந்து கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும், காளைகள் முட்டித் தள்ளியதில் இளையராஜா, கிரிஜா, சுபாஷினி ஆகிய 3 போலீஸ்காரர்கள் உள்பட 73 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார்நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். பலத்த காயம் அடைந்த 4 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து சென்று விட்டனர்.

விதிமுறைகளின் படி ஜல்லிக்கட்டு நடைபெறுகின்றதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சுழல் கேமராவும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு பணியில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் 8-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள், தீயணைப்பு துறை வாகனம் ஆகியவை தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் ஜல்லிக்கட்டு திடலே விழாக்கோலம் பூண்டிருந்தது.

இந்த ஜல்லிக்கட்டை பொறுத்தவரை காளைகள் வெளியேறி செல்லும் பகுதியில் தான் மாடு முட்டி அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்