தியாகதுருகம் அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

தியாகதுருகம் அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-01-13 22:58 GMT
கடலூர்

தியாகதுருகம் அருகே உள்ள தாரனாபுரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை கோவிந்தராஜ் தன்னுடைய கரும்பு தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு கரும்பு தோட்டத்தின் நடுவே உள்ள வரப்பில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ், உடனே இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராமன் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்