குழிக்குள் விழுந்த தொழிலாளியின் உடலை துளைத்த இரும்பு கம்பிகள்

எம்.எல்.ஏ. விடுதியில் நடந்து வரும் கட்டுமான பணியின் போது குழிக்குள் தவறி விழுந்த தொழிலாளியின் உடலை இரும்பு கம்பிகள் துளைத்தன. அவற்றை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர்.

Update: 2018-01-13 22:54 GMT
மும்பை,

மும்பை நரிமன்பாயிண்டில் மனோரா எம்.எல்.ஏ.க்களின் விடுதி உள்ளது. இந்த விடுதியில் தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் பணி நடந்து கொண்டு இருந்த போது ராஜேந்திரா பால் (வயது25) என்ற தொழிலாளி அந்த பகுதியில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டு இருந்த குழியில் தவறி விழுந்தார்.

இதில் குழியில் இருந்த இரும்பு கம்பிகள் அவரது மார்பு, வயிறு பகுதியில் துளைத்து மறுபுறம் வந்தது.

இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ராஜேந்திரா பாலின் உடலில் துளைத்த இரும்பு கம்பியை வெட்டி எடுத்து அவரை வெளியே மீட்டு கொண்டு வந்தனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஜி.டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சுமார் 2 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் உடலில் துளைத்த 2 இரும்பு கம்பிகளை டாக்டர்கள் அகற்றினர். இந்த விபத்து குறித்து ஆசாத் மைதான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்