திருச்சி மாநகரை கலக்கிய 4 திருடர்களை போலீசார் கைது செய்தனர் 17 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

திருச்சி மாநகரை கலக்கிய திருடர்கள் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 17 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

Update: 2018-01-13 22:45 GMT
திருச்சி,

திருச்சி மத்திய பஸ் நிலையம், ஜங்ஷன் ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் திருட்டு போவதாக கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் திருடர்களை விரைந்து பிடிப்பதற்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.

போலீஸ் துணை கமிஷனர் (குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு) மயில்வாகனன், கண்டோன்மெண்ட் சரக குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சிவசங்கர் ஆகியோரின் மேற்பார்வையில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்பட 7 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று தனிப்படை போலீசார் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கருமண்டபம் போலீஸ் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெரம்பலூர் மாவட்டம் மேரிபுரத்தை சேர்ந்த ஹரிகரன் (வயது 43) என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.

ஹரிகரனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த மொத்தம் 8 திருட்டு மோட்டார் சைக்கிள்களை மீட்டனர். இதேபோல் கோரிமேடு பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்த கருமண்டபம் குளத்துக்கரையை சேர்ந்த பாபு என்கிற கருமண்டபம் பாபுவை (29) கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்சி மாநகர பகுதியில் மொத்தம் 5 மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது.

அந்த 5 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் மீட்டனர். இதேபோல் அதே பகுதியின் வழியாக திருட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்த தங்கத்துரை மகன் ராஜதுரை(19), துவாக்குடி மலையை சேர்ந்த சுப்ரமணி மணிகண்டன்(19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 4 திருட்டு மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர்.

திருச்சி மாநகரை கலக்கிய மோட்டார் சைக்கிள் திருடர்களான ஹரிகரன், பாபு, ராஜதுரை, சுப்ரமணி மணிகண்டன் ஆகிய 4 பேர் மீது தனிப்படை போலீசார் வழக்குகள் பதிவு செய்து கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்ததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர். இதில் ஹரிகரன் மீது திருச்சி மாநகர போலீஸ் நிலையங்களில் 15 வழக்குகளும், பாபு மீது கொலை முயற்சி வழக்கு உள்பட 5 வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜதுரையும், சுப்ரமணி மணிகண்டனும் திருட்டு தொழிலுக்கு புதிதாக வந்தவர்கள் ஆவார்கள். 

மேலும் செய்திகள்