ஆர்வத்தை தூண்டும் அரசு பள்ளி அறிவியலில் சாதிக்கும் மாணவர்கள்

ஆர்வத்தை தூண்டும் அரசு பள்ளியால் அறிவியலில் மாணவர்கள் சாதிக்கின்றனர்.

Update: 2018-01-13 22:45 GMT
வெள்ளியணை,

இன்றைய சமுதாயத்தில் நிலவும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்கு அறிவியல் மூலம் தீர்வு காணும் விதத்தில் கடந்த 12 ஆண்டுகளில் 15 கண்டுபிடிப்புகளை உருவாக்கி, அதை மாவட்டம், மாநிலம், தென்னிந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி சாதித்து உள்ளனர் ஒரு அரசுப்பள்ளி மாணவர்கள். கடந்த 1961-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக இருந்து 1979-ம் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது 850-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு செயல்பட்டு வரும் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தான் அவர்கள்.

இம்மாணவர்கள் அறிவியல் ஆசிரியர் தனபால் வழிகாட்டுதல் மூலம் புதிய சமுதாய பயன்பாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளான, சாலை பாதுகாப்பில் ரோபோ, அணுமின் உற்பத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும், சீமைக்கருவேல மரத்திலிருந்து மின்சாரம் தயாரித்தல், சி.என்.4 நேப்பியர் பயிரிலிருந்து மின்சாரம், வேதிபொருள் பிரித்தெடுத்தல், சூழலியல் காக்கும் கழிவறை, வைக்கோல் மறுசுழற்சி, நிலத்தடி நீர் தாங்கிகளை செறிவூட்டல், தலைக்கவசம் அணிந்தால்தான் இருசக்கர வாகனம் இயங்கும், டெங்கு கொசு ஈர்ப்பான், பாதை மாறிய தேனீக்களால் பாதித்த விவசாயம், குளங்களில் ஆகாயத் தாமரையை அகற்றி மறுசுழற்சி, வீடுகள், தொழிற்சாலைகளில் ஆற்றல் சேமிப்பு, பார்த்தீனியம் செடியில் இருந்து இயற்கை உரம் போன்ற 15-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை, பள்ளிக்கல்வித்துறை, இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆகிய துறைகளில் நடந்த பல்வேறுகட்ட அறிவியல் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி 30 தங்கப்பதக்கங்களுடன், 20 முறை முதல் பரிசு பெற்று 293 மாணவர்கள் இளம் விஞ்ஞானிகள் சான்று பெற்று சாதனை படைத்தனர்.

இதுகுறித்து ஆசிரியர் தனபால் கூறியதாவது:-

கிராமப்புற மாணவர்கள் விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் என்ற நோக்கில் பள்ளியில் இளம் விஞ்ஞானிகள் குழு ஆரம்பிக்கப்பட்டு அதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு பள்ளி வேலை நேரம் தவிர காலை, மாலை தலா ஒரு மணி நேரமும், விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் நாளிதழ்கள் வாசித்தல், அறிவியல் ஆய்வுகள் கொண்ட கட்டுரைகள் உள்ள வார, மாத இதழ்கள் வரவழைக்கப்பட்டு ஆண்டுக்கு 420 மணி நேரம் கூடுதல் பயிற்சி அளித்து வருகின்றோம். மேலும் களப்பயணமாக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று ஆய்வு மேற்கொள்ளுதல், அறிவியல் நாடகம், ஆய்வுக்கட்டுரை, கருத்தரங்கம், வினாடி- வினா போன்ற நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கு பெற செய்கிறோம். இதனால் மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் அறிவியலில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகின்றனர்.

அரசுப்பொதுத்தேர்வில் 100 மதிப்பெண் பெறும் இளம் விஞ்ஞானிகள் குழு மாணவர்களுக்கு 5 கிராம் வெள்ளி நாணயம் எனது சொந்த செலவில் ஆண்டுதோறும் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறேன். இவ்வாறு இப்பள்ளி மாணவர்கள் அறிவியலில் சாதிக்கும் செய்தியை நாளிதழ்கள் வாயிலாக அறியும் மற்ற மாவட்ட பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர் தனபாலும் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் தென்னிந்திய அளவில் ஆசிரியர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் பங்குபெற்று பரிசும், பாராட்டும் பெற்றுள்ளார். குறிப்பாக ஜனவரி 2017-ம் ஆண்டு பாண்டிச்சேரியில் நடைபெற்ற கண்காட்சியில் தென்னிந்திய அளவில் 2-ம் பரிசும், விருதும் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தற்போது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கருப்பண்ணன் முயற்சியால் பள்ளி முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் நன்கொடை பெற்று ரூ.1 லட்சம் செலவில் இளம் விஞ்ஞானிகள் அறிவியல் ஆய்வகம் சீரமைக்கப்பட்டு, மாணவர்கள் பயன்பாட்டில் உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு இப்பள்ளி மாணவர்களால் நடித்து ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டு கட்டணமில்லாமல் 639 கல்வி நிறுவனங்களுக்கு சி.டி.யாக வழங்கி, அதை 5 லட்சத்து 59 ஆயிரத்து 269 மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர். மேலும் தற்போது 100 எளிய அறிவியல் சோதனைகள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லா தூய்மை இந்தியா என குறும்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக இப்பள்ளியில் பயின்று அறிவியலில் இன்ஸ்பயர் விருது பெற்ற மாணவர் ஹரிஹரன் தற்போது ஜப்பானில் இயற்பியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு கிராமப்புறத்தில் செயல்பட்டாலும், மாணவர்களை ஊக்கப்படுத்தி அறிவியலில் சாதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அறிவியல் ஆசிரியர் தனபால், தலைமை ஆசிரியர் தமிழரசன், கட்டிடக்குழு தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன், ஆசிரிய- ஆசிரியைகள் மற்றும் முன்னாள் மாணவர்களின் கனவு என்பது இப்பள்ளி மாணவர்களில் ஒருசிலராவது புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்த வேண்டும் என்பதாகும். 

மேலும் செய்திகள்