மாணவரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

கண்ணமங்கலம் அருகே மாணவரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-01-13 23:00 GMT
கண்ணமங்கலம்,

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிவாசன். இவரது மகன் ராஜி என்கிற வாசுதேவன் (வயது 18). அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வாசுதேவன் சந்தவாசலில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.

அப்போது அந்த பகுதியில் ஓட்டல் முன்பு நின்றிருந்த புஷ்பகிரி காலனியை சேர்ந்த விஜயபிரதாபன் (26) என்பவர், வாசுதேவனை பார்த்து ஏன் வேகமாக போகிறாய் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார். இதனையடுத்து ஏற்பட்ட தகராறில் விஜயபிரதாபன், வாசுதேவனை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வாசுதேவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வேலூர் - திருவண்ணாமலை மெயின்ரோடு வெள்ளூர் கூட்ரோட்டில் வாசுதேவனை தாக்கிய விஜயபிரதாபன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சந்தவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப் -இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயபிரதாபனை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்