போக்குவரத்து நெரிசல் கடைவீதிகளுக்குள் ஷேர் ஆட்டோக்கள் இயக்குவதற்கு 4 நாள் தடை போலீசார் நடவடிக்கை

திருப்பத்தூரில் ஜவுளி, காய்கறிக்கடை உள்ள வீதிகளில் பொங்கலையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் ஷேர் ஆட்டோக்கள் இயக்க 4 நாட்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-01-13 22:45 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் நகரானது கிராமங்களின் மத்தியில் அமைந்துள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட எல்லைகள் இதன் அருகாமையில் உள்ளதால் அந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்குள்ள கடைகளுக்கு வருகின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடந்த 2 நாட்களாக திருப்பத்தூரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் இங்கு கிருஷ்ணகிரி ரோடு, வாணியம்பாடி ரோடு, பழைய ஆலங்காயம் ரோடுகளில் கூட்டம் அலைமோதுகிறது. இங்குள்ள ஜவுளிக்கடைகள், மளிகைக்கடைகளில் வியாபாரம் களை கட்டியுள்ளது. மேலும் காய்கறி மார்க்கெட்டிலும் அனைத்து வகையான காய்கறி விற்பனையும் நேற்று தீவிரம் அடைந்தது. பல்வேறு இடங்களில் கரும்பு விற்பனை, மஞ்சள் குலைகள் விற்பனையும் தீவிரம் அடைந்துள்ளது.

மேலும் வெல்லமும் மூட்டை மூட்டையாக கடைகளில் குவிக்கப்பட்டுள்ளது. இவற்றை வாங்குவதற்காக உள்ளூர் மக்களும், வெளியூரிலிருந்து வருபவர்களும் அலைமோதி வருகின்றனர். பொங்கல் முடிந்ததும் மாட்டுப்பொங்கல் வருகிறது. எனவே மாடுகளை அலங்கரிக்க தேவையான பொருட்களும் திருப்பத்தூரில் தாராளமாக கிடைக்கிறது. இவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இதனால் நகரில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்கு மேலும் இடையூறு ஏற்படுத்துவதுபோல் ஷேர் ஆட்டோக்கள் இயக்குவதும் நெருக்கடியாக உள்ளது.

தடை

இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருப்பத்தூர் நகரின் முக்கிய வீதிகளான கிருஷ்ணகிரி ரோடு, வாணியம்பாடி ரோடு, ரெயில்வே ஸ்டேசன் ரோடு, ஆலங்காயம் ரோடுகள் வழியாக ஷேர்ஆட்டோக்கள் இயக்குவதற்கு போலீசார் தடைவிதித்துள்ளனர். இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறுகையில், பொங்கலையொட்டி இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 17-ந் தேதி வரை மேற்கண்ட வீதிகள் வழியாக ஷேர்ஆட்டோக்கள் இயக்க அனுமதி வழங்கப்படவில்லை. எனவே ஷேர் ஆட்டோக்கள் அரசு மருத்துவமனை வழியாக வந்து தாலுகா அலுவலகம் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

சாலையோர கடைகளால் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அந்த கடைகள் பழைய பஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலுகா, கந்திலி போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை, அரக்கோணம் உள்பட மாவட்டத்தின் அனைத்து நகரங்களிலும் பொங்கல் பொருட்கள் விற்பனை நேற்று களை கட்டியது. 

மேலும் செய்திகள்