கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் கொன்று புதைப்பு, 4 பேர் கைது

பண்ருட்டி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் பள்ளி ஆசிரியரை கொன்று ஆற்றில் உடலை புதைத்தது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-13 23:15 GMT
நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலி 10-வது வட்டத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சதீஷ்குமார்(வயது 27). இவர் நெய்வேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்து வந்தார். கடந்த 9-ந்தேதி சதீஷ்குமார் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். ஆனால் அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது செல்போன் எண்ணுக்கு பெற்றோர் தொடர்பு கொண்ட போதும், அவருடன் பேச முடியவில்லை. தொடர்ந்து அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் என்ன ஆனார் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

இதையடுத்து, ஏழுமலை கடந்த 10-ந்தேதி நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை யாரேனும் பணத்துக்காக கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சதீஷ்குமார் பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டும் விசாரணையை துரிதப்படுத்தினர். இதில் சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நெய்வேலி வட்டம் 5-ஐ சேர்ந்த ஞானபிரகாசம் (42), வட்டம் 21-ஐ சேர்ந்த சேட்டு (34), சபரீசன் (36), வடலூர் ரஞ்சித் (28) ஆகியோர் என்பது தெரிந்தது.

மேலும் விசாரணையில் திடுக்கிடும் தகவலை அவர்கள் தெரிவித்தனர். அதாவது, சதீஷ்குமாரை காரில் கடத்தி சென்று கொலை செய்து, உடலை, பண்ருட்டி அருகே எஸ்.ஏரிபாளையத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் குழிதோண்டி புதைத்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா மற்றும் நெய்வேலி போலீசார் ஆகியோர் போலீசில் சிக்கியவர்களை அழைத்துக்கொண்டு எஸ்.ஏரிப்பாளையத்துக்கு சென்றனர். அங்கு கெடிலம் ஆற்றில் சதீஷ்குமார் புதைக்கப்பட்ட இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினார்.

தொடர்ந்து தாசில்தார் விஜய்ஆனந்த் முன்னிலையில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது சதீஷ்குமாரின் உடல் நிர்வாண மான நிலையில் இருந்தது. இதை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து அங்கேயே சதீஷ்குமாரின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த சதீஷ்குமாருக்கும், பிடிபட்ட ஞானபிரகாசத்தின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த அவர் சதீஷ்குமாரை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என தெரிகிறது.

 இதனால் ஆத்திரமடைந்த ஞானபிரகாசம் தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு சதீஷ்குமாரை கடத்தி சென்று கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து ஞானபிரகாசம் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஞானபிரகாசம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நெய்வேலி நகர செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

மேலும் செய்திகள்