ஒருவரையொருவர் விமர்சிக்கக்கூடாது: கவர்னர் கிரண்பெடியுடன் ஒப்பந்தம் அமைச்சர் கந்தசாமி பேட்டி

ஒருவரையொருவர் விமர்சிக்கக்கூடாது என்று கவர்னர் கிரண்பெடியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அமைச்சர் கந்தசாமி கூறினார்.

Update: 2018-01-13 23:15 GMT
புதுச்சேரி,

புதுவை அமைச்சர் கந்தசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை கவர்னர் கிரண்பெடியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினோம். அப்போது கவர்னர், அமைச்சரவை, அதிகாரிகள் இணைந்து செயல்பட்டால்தான் மாநிலம் வளர்ச்சி பெறும் என்று கூறினேன். பிரச்சினைகள் தொடர்பாக சமூக வலைதளங்கள் வாயிலாக கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்றும் கூறினேன்.

நாங்களும் உங்களை விமர்சிப்பதை நிறுத்திக் கொள் கிறோம். நீங்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்துள்ளோம். கவர்னரும், அமைச்சரவையும் சுமுகமாக செல்லவேண்டும். கவர்னருக்கு தமிழ் தெரியாததால் அதிகாரிகள் சிலர் தவறான தகவல்களை அவரிடம் தெரிவித்து விடுகின்றனர்.

தற்போது இலவச துணிகளுக்கு பதிலாக ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வங்கியில் பணம் போடப்படுகிறது. மற்ற சமுதாயத்தினருக்கு தமிழ் புத்தாண்டு தினத்தன்று துணியாக வழங்கப்படும். இதற்கான நிதியை பிற துறைகளில் இருந்து ஒதுக்கீடு செய்ய நிதித்துறை செயலாளர் மறுத்துவிட்டார்.

16 சதவீதம் உள்ள ஆதிதிராவிட மக்களுக்கு கொடுத்துவிட்டு 84 சதவீத மக்கள்தொகை கொண்ட பிற சமுதாய மக்களுக்கு எதுவும் கொடுக்காதது வேதனையாக உள்ளது. இதற்கு தேவையான நிதி ரூ.10 கோடியை ஒதுக்க நிதித்துறை செயலாளர் கோப்பினை மாற்றி எழுதியிருக்கலாம். ஆனால் அவர் அமைச்சரவைக்கு எதிராக செயல்படுகிறார். கடந்த 6 மாதமாக கேட்கக்கூடாத கேள்விகளை கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்புகிறார்.

நிதித்துறை செயலாளரின் செயல்பாடு குறித்து கவர்னர், முதல்-அமைச்சரிடம் தெரிவித்துவிட்டேன். அவர் தனது நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். அவரது செயல்பாடு எனக்கு வேதனையை அளிக்கிறது. புதுவை மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான கந்தவேலு புதுவை மாநில மக்களின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

இவர் கடந்த ஆட்சியிலும் புதுவை மாநிலத்தில்தான் பணியாற்றினார். அப்போது வேறு திட்டங்களுக்கு நிதியை மாற்றி ஒப்புதல் வழங்கியது கிடையாதா? அரசு அதிகாரிகள் கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் பாலமாகத்தான் இருக்கவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் நான் தொடர்பில்தான் உள்ளேன். அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். அவரும் காங்கிரசில் இருந்து சென்றவர்தான். அவர் கவர்னருக்கு வாழ்த்துச் சொல்வதில் தவறு ஏதும் இல்லை என்றார். பேட்டியின்போது துணை சபாநாயகர் சிவக்கொழுந்து உடனிருந்தார். 

மேலும் செய்திகள்