திருப்பூர் காசிபாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

திருப்பூர் காசிபாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலந்து செல்வதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2018-01-13 22:45 GMT
நல்லூர்,

திருப்பூரில் பின்னலாடை துறையின் அங்கமாக சாய ஆலைகள் இயங்கி வருகிறது. திருப்பூர் மாநகரம், மையப்பகுதி வழியாகவும், புறநகர் பகுதி வழியாகவும் நொய்யல் ஆறு செல்கிறது. நொய்யல் ஆற்றையொட்டி அருகில் பல சாய ஆலைகளும், சுத்திகரிப்பு நிலையங்களும் இயங்கி வருகின்றன. அனுமதி இன்றியும் இயங்கி வரும் சில சாய, சலவை ஆலைகள் சாயக்கழிவுகளை நொய்யல் ஆறு உள்பட நீர்நிலைகளில் கலந்து விட்டு விடுகின்றன.

இதனால் நீர்நிலைகள் மாசுபடுகிறது. பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். அந்த நீரை பயன்படுத்த முடிவதில்லை. இதனால் சாயக்கழிவுநீரை நீர்நிலைகளில் கலக்கும் சாய, சலவை ஆலைகள், பிரிண்டிங் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

திருப்பூர் நல்லூரை அடுத்த காசிபாளையத்தில் பொதுசுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிரே தடுப்பணை ஒன்று உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து மழைக்காலங்களில் முதலிபாளையம் ஊராட்சி மாணிக்காபுரம் குளத்திற்கு சமீபத்தில் வாய்க்கால் தூர்வாரப்பட்டு நீர் சென்று வருகிறது. இந்நிலையில் அந்த தடுப்பணையில் நேற்று முன்தினம் பச்சை நிறத்தில் சாயக்கழிவுநீர் கலந்து சென்றது. தடுப்பணையின் 3 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழுவதால் தண்ணீர் நுரையுடன் சென்றது. இந்த கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலக்கிறது.

இதனால் இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாய ஆலைகளில் இருந்து கழிவுநீர் விடப்படுகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பதை கண்டறிந்து இதனை தடுக்க வேண்டும். மேலும், முறைகேடாகவும், அனுமதியின்றியும் இயங்கும் சாய, சலவை, பிரிண்டிங் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

மேலும் செய்திகள்