திருமூர்த்தி அணையில் படகு சவாரியை தொடங்க வேண்டும், சுற்றுலா பயணிகள் கோரிக்கை

திருமூர்த்தி அணையில் படகு சவாரியை தொடங்க வேண்டும் என்று சுற்றுலாபயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-01-13 21:45 GMT
தளி,

உடுமலை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை அமைந்துள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்கள். இந்த கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் வழியில் திருமூர்த்தி அணை, சிறுவர் பூங்கா, நீச்சல்குளம், படகு இல்லம், வண்ணமீன் காட்சியகம் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்கள் அமைந்துள்ளது.

இதனால் திருமூர்த்தி மலையில் உள்ள இயற்கை சூழலை ரசிக்கவும், பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் தினந்தோறும் ஏராளமான வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றார்கள். இதன் காரணமாக உடுமலை பகுதியில் திருமூர்த்திமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது.

இந்த நிலையில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக திருமூர்த்தி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை முறையாக பெய்து வந்தது. இதன் காரணமாக திருமூர்த்தி அணை வருடத்திற்கு 2 முறைக்கும் மேலாக முழுமையாக நிரம்பி வந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் தளி பேரூராட்சியின் சார்பாக திருமூர்த்தி அணைப்பகுதியில் படகு இல்லம் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அணையின் நீர் இருப்பு அதிகமாக உள்ள சமயத்தில் தளி பேரூராட்சியின் மூலமாக அங்கு படகு சவாரி இயக்கப்பட்டு வந்தது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த சுற்றுலாபயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக திருமூர்த்திமலை செட்டில்மெண்டை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில் திருமூர்த்தி அணையில் படகு இயக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திருமூர்த்தி அணையில் மலைவாழ் மக்கள் படகுகளை இயக்கி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக பருவமழை பொய்த்து போனதன் விளைவாக திருமூர்த்தி அணைப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவியது. இதன் காரணமாக சிற்றாறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து குறைந்து போனதால் அணை நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அணையில் நீர் இருப்பு குறைந்து போனதால் அங்கு படகு இயக்குவதற்கு தடங்கல் ஏற்பட்டது.

இதையடுத்து அணையில் உள்ள படகு இல்லத்தின் அருகே படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் படகுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் அவை முற்றிலுமாக சேதமடைந்து விட்டது. இதன் காரணமாக ஒவ்வொரு முறையும் அணை நிரம்பும் போதும் அங்கு படகுசவாரி தொடங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இதனால் அணைப்பகுதிக்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இதையடுத்து திருமூர்த்தி அணைப்பகுதியில் படகு இயக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதற்குண்டான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு,தனியார் அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருமூர்த்திமலைக்கு வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவதற்கான வாய்ப்புகள் நிலவுகிறது.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அணைப்பகுதியில் படகு சவாரி செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். ஆதலால் திருமூர்த்தி அணையில் படகு சவாரியை தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்