பழுதடைந்து காணப்படும் துணை சுகாதார நிலையம் புதிதாக அமைக்க கோரிக்கை

புதுமாவிலங்கை ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் பழுதடைந்து காணப்படுகிறது. அதை புதிதாக அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-01-13 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது புதுமாவிலங்கை ஊராட்சி. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் மருத்துவ தேவைக்காக பேரம்பாக்கம் செல்லும் சாலையில் அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அதன் அருகே செவிலியர்கள் தங்கி பணிபுரிய ஏதுவாக குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டது. இதன் மூலம் புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர். நகர், சத்தரை, பிஞ்சிவாக்கம், அகரம் போன்ற பகுதி மக்கள் பயன்பெறுவார்கள். ஆனால் இந்த கட்டிடம் கட்டி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாடில்லாமல் உள்ளது.

துணை சுகாதார நிலையத்திற்கு உள்ளேயும், அதை சுற்றிலும் முட்செடிகள் மற்றும் பெரிய அளவில் மரங்கள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. மேலும் செவிலியர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட கட்டிடத்தை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்துள்ளது.

துணை சுகாதார நிலைய கட்டிடத்தில் உள்ள கதவு மற்றும் ஜன்னல்களை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். தற்போது இந்த கட்டிடம் வெற்றுச்சுவராக காட்சியளிக்கிறது. இந்த பகுதி மக்கள் மருத்துவ தேவைக்காக கடம்பத்தூருக்கோ அல்லது பேரம்பாக்கத்திற்கோ சென்றுதான் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.

எனவே புதுமாவிலங்கை ஊராட்சியில் பழுதடைந்து காணப்படும் துணை சுகாதார நிலையத்தை இடித்து விட்டு புதிதாக அமைக்க வேண்டும். அதன் அருகில் உள்ள செவிலியர் தங்கும் கட்டிடத்தை அரசு அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்