செயற்கை இதயத்தை பையில் சுமந்து வாழும் பெண்!
இதயம் செயல் இழந்த ஒரு பெண், செயற்கை இதயத்தை பையில் வைத்து அதை எப்போதும் சுமந்தபடி உயிர் வாழ்ந்து வருகிறார்.
இங்கிலாந்தில் இதயம் செயல் இழந்த ஒரு பெண், செயற்கை இதயத்தை பையில் வைத்து அதை எப்போதும் சுமந்தபடி உயிர் வாழ்ந்து வருகிறார்.
கிழக்கு லண்டனை சேர்ந்தவர் ஷெல்வா ஹுசைன். 39 வயதாகும் இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதயம் செயல் இழந்த நிலையில் ஹாரிபீல்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஷெல்வாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவருக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.
எனவே அவரது கணவரின் அனுமதியுடன் செயற்கை இதயம் வைக்க மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
ஆனால் செயற்கை இதயம் உடலில் பொருத்தப்படவில்லை. ஷெல்வாவின் உடலில் டியூப்கள் வைக்கப்பட்டு அதன் உதவியுடன் மின்சார பேட்டரிகள் பொருத்தப்பட்டு இதயம் ஒரு பையில் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வரும் காற்று ஷெல்வாவின் மார்புக்குச் சென்று உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தைச் செலுத்துகிறது.
அதற்கான அறுவைசிகிச்சை அவருக்கு 6 மணி நேரத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு தற்போது ஷெல்வா நலமாக உள்ளார். எல்லோரையும் போல இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வரு கிறார்.
அவர் கூறும்போது, ‘என் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட உதவிய ஹாரிபீல்டு மருத்துவமனைக்கு நன்றி. நான் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பை அவர்கள்தான் ஏற்படுத்திக்கொடுத்தனர்’ என்றார். இங்கிலாந்தில் ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு 50 வயதான ஒரு நபருக்கு இதுபோல செயற்கை இதயம் வைக்கப்பட்டுள்ளது.