30 ஆண்டுகளுக்குப் பின் சாக்லேட் சுவைக்க முடியாது?
உலக மக்கள் விரும்பிச் சுவைக்கும் சாக்லேட்டை வருங்காலத்தில் தயாரிக்க முடியாது என்று அதிர்ச்சிக் குண்டு போடுகிறார்கள், ஆய்வாளர்கள்.
உலக மக்களின் நாவை ஒட்டுமொத்தமாக அடிமையாக்கி வைத்திருக்கிறது, சாக்லேட். இயற்கையில் சாக்லேட்டுக்கு இனிப்புச் சுவை கிடையாது. கோகோ மரங்களில் இருந்து கிடைக்கும் கோகோ பீன்ஸ்தான் சாக்லேட்டின் மூலப் பொருள். கசப்புச் சுவை கொண்ட இதனுடன் இனிப்பு சேர்க்கப்பட்டு சாக்லேட் தயாரிக்கப்படுகிறது.
கோகோ மரங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவு காணப்படுகின்றன. உலகில் 50 சதவீத சாக்லேட்டுக்கான கோகோ பீன்ஸ் அங்கிருந்துதான் பெறப்படுகிறது. ஐவரி கோஸ்ட், கானா ஆகிய இரு ஆப்பிரிக்க நாடுகளில் கோகோ மரங்கள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘உலகின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அடுத்த 30 ஆண்டுகளில் 2.1 செல்சியஸ் வெப்பநிலை கூடும். இதனால் மழை அளவு குறைந்து, சாக்லேட் உற்பத்தி அதிக அளவு பாதிக்கப்படும். கோகோ மரங்கள் வளர்வதற்கு அதிகப்படியான மழை தேவை’ என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மரங்களைப் போல கோகோ மரங்களை புதிய தொழில்நுட்பங்களின் மூலம் உருவாக்க முடியாது. 90 சதவீத கோகோ பீன்ஸ் சிறிய அளவிலான பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
உலகில் மழையின் அளவு குறைவதால் கோகோ மரங் களின் வளர்ச்சி குறைந்துகொண்டே செல்கிறது. இதனால் ஆண்டுக்கு 1 லட்சம் டன் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர் டங் ஹாகிங்ஸ் கூறு கிறார்.
பருவ நிலை மாற்றங்களினால் பல்வேறு மரங்கள் அழிந்துள்ளன. அந்த வரிசையில் கோகோ மரங்களும் இணையப் போகின்றன என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
சாக்லேட் இல்லாத உலகை பலரால் கற்பனை செய்யவே முடியாதே?