3 பேர் கொலை வழக்கில் அண்ணன்–தம்பி உள்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள்

தம்பதி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அண்ணன்–தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தொடுபுழா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-01-13 00:00 GMT

அடிமாலி,

அடிமாலி நகரில் தங்கும் விடுதி நடத்தி வந்தவர் குஞ்சுமுகமது (வயது 65) கடந்த 2015–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13–ந் தேதி குஞ்சுமுகமது, அவருடைய மனைவி ஆயிஷாம்மா (60), மாமியார் நாச்சி (85) ஆகியோர் தங்கும் விடுதிக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதில், ஆயிஷாம்மா, நாச்சி ஆகியோர் அணிந்திருந்த தங்க நகைகளும் மாயமாகி இருந்தன.

இதுகுறித்து அடிமாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த தங்கும் விடுதியில் தங்கியிருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்கள், நகை பணத்துக்கு ஆசைப்பட்டு அவர்களை கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

மேலும் அவர்களை கொலை செய்தது கர்நாடக மாநிலம் தூம்கூர் புக்காபட்டணம் பகுதியை சேர்ந்த ராகவேந்திரா (23), ஹனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த ராகேஷ்கவுடா (26), அவருடைய சகோதரர் மஞ்சுநாத் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்து கம்பிளி போர்வை வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு தொடுபுழா கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த கோர்ட்டு கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.27 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

மேலும் செய்திகள்