கும்மிடிப்பூண்டியில் வியாபாரியை கொன்று உடல் புதைப்பு 5 பேர் கைது

கும்மிடிப்பூண்டியில் முன்விரோதம் காரணமாக வியாபாரியை கொன்று ரெயில்வே பாலத்தின் கீழ் உடலை புதைத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-12 23:48 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் பாக்கிய சர்மா (வயது 33). நேற்று மதியம் இவரது அலுவலகத்திற்கு கும்மிடிப்பூண்டி திருக்குளத்தெருவை சேர்ந்த விமல் (வயது 20) என்பவர் நேரில் வந்து வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது;–

நான், 2 ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டி ம.பொ.சி.நகரை சேர்ந்த வியாபாரியான ஷாஜகான் (28) என்பவரிடம் வேலை செய்து வருகிறேன். அவரிடம் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி ரெயில் மற்றும் பிற இடங்களில் விற்பனை செய்து வருகிறேன்.

அந்த வேலை எனக்கு பிடிக்காததால் கடந்த 2 மாதங்களாக ஷாஜகானிடம் வேலைக்கு செல்லாமல் நின்று விட்டேன். என்னை வேலைக்கு அழைத்தும் நான் அவரிடம் வேலைக்கு செல்லவில்லை. இதனையடுத்து நேரில் வந்து என்னை ஷாஜகான் மிரட்டி வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு என்னை நேரில் சந்தித்த ஷாஜகான், என்னிடம் நீ வேலை செய்யாவிட்டால் யாரிடமும் வேலை செய்ய விடமாட்டேன். உன்னையும், உனது குடும்பத்தையும் காலி செய்து விடுவேன் என்றும் மிரட்டினார்.

அவரை விட்டு வைத்தால் என்னை காலி செய்து விடுவார் என பயந்து என்னுடைய நண்பர்களான சதீஷ்குமார், மணிகண்டன், கோகுல், கிருஷ்ணா மற்றும் ஒருவரிடம் ஷாஜகான் என்னை மிரட்டியதாக கூறினேன். அவர்கள் அனைவரும் ஷாஜகானை கொலை செய்து விடலாம் என்று என்னிடம் கூறி திட்டம் வகுத்தனர்.

இதனையடுத்து ஷாஜகானிடம் நான் வேலைக்கு வருவதாக கூறினேன். பின்னர் இது தொடர்பாக நேரில் பேசுவதற்கு கடந்த 8–ந்தேதி இரவு கும்மிடிப்பூண்டி துணை மின் நிலைய அலுவலகத்தின் பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே நாங்கள் 6 பேரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்திருந்தபோது ஷாஜகான் அங்கு வந்தார்.

முதலில் அவரிடம் ஒற்றுமையாக இருப்பது போல பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் மேற்கண்ட முன்விரோதத்தால் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷாஜகான் வயிற்றில் முதலில் குத்தினேன், அப்படியே கீழே சரிந்த ஷாஜகானை, நாங்கள் 6 பேரும் மாறி, மாறி கத்தியால் குத்தினோம்.

ஷாஜகான் இறந்து விட்டதை உறுதி செய்தபின், அருகில் இருந்த ரெயில்வே பாலத்தையொட்டிய கால்வாயில் பிணத்தை போட்டு விட்டு நாங்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டோம்.

மறுநாள் சம்பவ இடத்தை தூரத்தில் இருந்து பார்த்தபோது கொலை செய்த இடத்தில் காகங்கள் பறந்து கொண்டிருந்தன.

எனவே இதனை அப்படியே விட்டால் தெரிந்து விடும். நாங்கள் மாட்டிக்கொள்வோம் என எண்ணி நாங்கள் 6 பேரும் அன்றையதினம் (9–ந்தேதி) இரவு 10 மணி அளவில் மேற்கண்ட ரெயில்வே பாலத்தின் கீழ் பள்ளம் தோண்டி அதில் ஷாஜகான் உடலை புதைத்து விட்டோம்.

எப்படியும் இந்த வி‌ஷயம் தெரிந்து விடும். போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என பயந்து கிராம நிர்வாக அதிகாரியான உங்களிடம், விமல் ஆகிய நானும், எனது நண்பர்களான தண்டையார்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார்(19), கும்மிடிப்பூண்டி விவேகானந்தா நகரைச்சேர்ந்த மணிகண்டன் (19), பாலாகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கோகுல்(19), 18 வயதான ஒருவர் என 5 பேர் சரண் அடைகிறோம்.

மேலும் சிறுபுழல்பேட்டை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா என்பவர் மட்டும் தலைமறைவாகி உள்ளார். எங்களை அழைத்துச்சென்றால் ஷாஜகானை கொலை செய்து புதைத்த இடத்தை அடையாளம் காட்டுகிறோம். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டு உள்ளது.

மேற்கண்ட வாக்குமூலம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் கிராமநிர்வாக அதிகாரி பாக்கியம் சர்மா புகார் மனு அளித்தார். இதனையடுத்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சம்பவ இடத்தில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜகோபால் முன்னிலையில் ஷாஜகான் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட ஷாஜகானின் கழுத்தின் பாதி அறுக்கப்பட்டும், உடலில் முன்புறம் 17 கத்திக்குத்துகளும், முதுகுபுறம் 5 கத்திக்குத்துகளும் காணப்பட்டது. பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சுரேஷ் தலைமையில் சம்பவ இடத்திலேயே ஷாஜகானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்