மதிய உணவு அமைப்பாளர் பணி நியமனத்திற்கு லஞ்சம்: அமைச்சரின் உதவியாளரை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் ஐகோர்ட்டில் வழக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதிய உணவு திட்ட அமைப்பாளர், உதவியாளர் நியமனத்திற்கான நேர்முகத்தேர்வு பிப்ரவரி மாதம் 24–ந்தேதி நடந்தது.

Update: 2018-01-12 23:40 GMT

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியை சேர்ந்த கார்த்திகா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதிய உணவு திட்ட அமைப்பாளர், உதவியாளர் நியமனத்திற்கான நேர்முகத்தேர்வு பிப்ரவரி மாதம் 24–ந்தேதி நடந்தது. இதற்கு பிறகு அக்டோபர் மாதம் வரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பல்வேறு வழக்குகள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்டன. இதனால் அவசர அவசரமாக எந்தவிதமான விதிமுறைகளையும் பின்பற்றாமல் தகுதியில்லாதவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. உதாரணமாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் உதவியாளர் அன்பானந்தம் என்னை தொடர்பு கொண்டு, "ரூ.3 லட்சம் கொடுத்தால் மதிய உணவு திட்ட அமைப்பாளர் வேலை கிடைக்கும்" என்றார். இதுகுறித்து விசாரித்தபோது கலெக்டரின் நேர்முக உதவியாளரும், அமைச்சரின் உதவியாளரும் சேர்ந்து பணம் பெற்றுக்கொண்டு மதிய உணவு திட்ட பணியாளர்களை நியமனம் செய்ததாக அறிந்தேன்.

மேற்படி பணி நியமனத்தில் ஆதரவற்ற விதவைகள், படை வீரர்களின் மனைவிகள் மற்றும் அதே கிராமத்தில் வசிப்பவர்களுக்கு விதிகளின்படி முன்னுரிமை வழங்கப்படவில்லை. மாறாக, லஞ்சம் கொடுத்தவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே இந்த பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாக கொடுக்கப்பட்ட புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்