லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல் நடித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது

ஆயக்குடி பேரூராட்சி செயல் அலுவலரிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல் நடித்து பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-12 23:28 GMT

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்துக்கு நேற்று ஒருவர் வந்தார். பின்னர் செயல் அலுவலர் கோட்டைச்சாமியை சந்தித்த அவர், தான் லஞ்ச ஒழிப்பு பிரிவின் மதுரை மண்டல அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டார். தொடர்ந்து, உங்கள் மீது 300–க்கும் மேற்பட்ட புகார்கள் லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு வந்துள்ளது. அதில், பல நீங்கள் உங்கள் பணியை செய்வதற்கு கிராம மக்களிடம் பணம் வாங்கியதாக உள்ளது என தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கோட்டைச்சாமி தான் அவ்வாறு யாரிடமும் பணம் வாங்கவில்லை என கூறியுள்ளார். உடனே உங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக கொடுக்கும்படி லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல் பேசியவர் கேட்டார். இதையடுத்து கோட்டைச்சாமியும் அவர் கூறியபடி எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்தார்.

இதற்கிடையே பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள மற்ற அலுவலர்களுக்கு அவர் போலி அதிகாரியாக இருப்பாரோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள், ஆயக்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி அந்த நபரிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது அவர் தான் லஞ்ச ஒழிப்பு பிரிவின் மதுரை மண்டல அதிகாரி என தெரிவித்தார். இதையடுத்து அவருடைய அடையாள அட்டையை காண்பிக்கும்படி இன்ஸ்பெக்டர் கேட்டார். ஆனால் அடையாள அட்டைக்கு பதிலாக ஒரு ஆவணத்தை காட்டினார். அதில் அவருடைய புகைப்படத்துடன் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரி என குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் அந்த ஆவணத்தை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆய்வு செய்த போது அது போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார். அதில் அவருடைய பெயர் விஜயராகவன் (வயது 42) என்பதும், புதுஆயக்குடி குறிஞ்சிநகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல் நடித்து பணம் பறிக்க முயன்றார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் அவர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நடத்திய விசாரணையில், அவர் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக பணியாற்றினார் என்றும், அங்கு ரூ.26 லட்சத்தை கையாடல் செய்ததற்காக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் அவர் மீது போலீஸ் மூலம் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்