நாற்கர சாலைக்காக நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு-திடீர் பரபரப்பு

சுங்கான்கடை அருகே தங்க நாற்கர சாலைக்காக நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2018-01-12 23:15 GMT
அழகியமண்டபம்,

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தங்க நாற்கர சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிக்காக தனியாரின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இருந்தது.

சில இடங்களில் சாலை பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அவர்கள் காலிசெய்து கொடுக்கவில்லை. இதனால் மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை நோட்டீசு அனுப்பப்பட்டது. அதன்பிறகும் அவர்கள் நிலத்தை ஒப்படைக்கவில்லை.

இந்தநிலையில் மாவட்ட நிலஎடுப்பு அதிகாரி ரமேஷ், தனி தாசில்தார் சுசீலா, கல்குளம் தாசில்தார் ராஜா, வருவாய் ஆய்வாளர் ராஜா ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேற்று காலை 9 மணிக்கு சுங்கான்கடை அருகே களியங்காடு பகுதியில் நிலத்தை கையகப்படுத்த வந்தனர். இதற்காக பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு பணிக்காக இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

களியங்காடு சந்திப்பு பகுதியில் நாற்கர சாலைப்பணிக்காக கையகப்படுத்தப்பட்ட பகுதியில் ஒரு டாக்டரின் வீடு இருந்தது. அவர் தனது நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தார்.

இதைதொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும், வீட்டின் உரிமையாளர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நீச்சல் குளத்துடன் இருந்த வீடு, காம்பவுண்டு சுவர் ஆகியவற்றை அகற்றி நிலத்தை கையகப்படுத்தினர்.

மேலும், அருகில் உள்ள கார் கியாஸ் நிலையத்தையும் அதிகாரிகள் கையகப்படுத்த முயன்றனர். அப்போது, அதன் உரிமையாளர்கள், டேங்கில் கியாஸ் முழுமையாக இருப்பதால் தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று கூறினார்கள். அதைதொடர்ந்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கியாஸ் நிலையத்தின் காம்பவுண்டு சுவர் மட்டும் இடித்து அகற்றப்பட்டது.

மேலும் செய்திகள்