ஆண்டாள் குறித்து கூறிய கருத்துக்கு எதிர்ப்பு: கவிஞர் வைரமுத்துவை கைது செய்ய கோரி ஸ்ரீரங்கத்தில் ஊர்வலம்

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீரங்கத்தில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

Update: 2018-01-12 23:00 GMT

ஸ்ரீரங்கம்,

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைணவ பக்தர்கள் அம்மாமண்டபத்தில் இருந்து திருப்பாவை பாடியபடி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கா, ரெங்கா கோபுரத்தை வந்தடைந்தனர். இடையிடையே வைரமுத்துவை கைது செய்ய வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

பின்னர் ரெங்கா, ரெங்கா கோபுரத்தில் இருந்து, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கநாராயண ஜீயர் தலைமையில் தெற்கு உத்திரை வீதியில் புறப்பட்ட ஊர்வலம், மேற்கு உத்திரைவீதி, வடக்கு உத்திரைவீதி, கிழக்கு உத்திரைவீதி வழியாக மீண்டும் தெற்கு உத்திரைவீதியில் உள்ள ரெங்கா, ரெங்கா கோபுரத்தை வந்தடைந்தது.

ஊர்வலத்தின் முடிவில் கவிஞர் வைரமுத்துவின் உருவப்பொம்மையை சிலர் எரிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் உடனடியாக அதை தடுத்து உருவப்பொம்மையை பறித்து சென்றனர். பின்னர் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்துவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதில் ஸ்ரீரங்கம் கோவில் தலைமை அர்ச்சகர்கள் சுந்தர்பட்டர், நந்து பட்டர், ராகவன் பட்டர், திவ்யதேச பாரம்பரிய பாதுகாப்பு பேரவை துணைத்தலைவர் திருகோஷ்டியூர் மாதவன், கபிஸ்தலம் சீனிவாச ஆச்சாரியார், ஸ்ரீவைஷ்ணவ கிருஷ்ணமாச்சாரியார் மற்றும் கோவில் ஸ்தலஸ்தார்கள், அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், கைங்கர்யகாரர்கள், திரளான பெண் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்ரீரங்கத்தில் இன்று நாங்கள் அனைவரும் கூடியிருப்பது இந்து துரோகிக்கு கண்டனம் தெரிவிப்பதற்காகவே.

மேலும் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியது, தமிழகத்திற்கும் மட்டுமல்ல இந்தியாவிற்கே களங்கம். இந்த களங்கத்தை பார்த்தும் காவல்துறையினர் அவரை கைது செய்யாமல் உள்ளனர். அவரை கைது செய்ய வேண்டும். மேலும் கவிஞர் வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பக்தர்கள் அனைவரும் வைரமுத்து மீது வழக்கு தொடர வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்