பாத்திர வியாபாரி கொலையில் மனைவி உள்பட 3 பேர் கைது

பாத்திர வியாபாரி கொலை வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கி உள்ளது. இதில் தொடர்புடைய அவரது மனைவி, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2018-01-12 22:50 GMT
மும்பை,

மும்பை ஜே.ஜே. மார்க் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில் தலையில்லா ஆண் உடல் ஒன்றை எம்.ஆர்.ஏ. மார்க் போலீசார் மீட்டனர். அந்த உடல் யார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த பாத்திர வியாபாரி கிசான் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கிசானின் மனைவி பான்சி பென்னிடம்(வயது60) தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர் குடித்துவிட்டு வந்து தினமும் தொல்லை கொடுத்ததால் 11 ஆண்டுகளுக்கு முன் தனது கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்து, உடலை ஜே.ஜே. மார்க் மேம்பாலத்திற்கு கீழ் வீசிய அதிர்ச்சி தகவலை கூறினார்.

மேலும் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது தலையை துண்டித்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் கூலிப்படையை சேர்ந்த பிராசாத் அலி ஷா(48), அவரது தம்பி இஸ்ரத் அலி ஷா ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சகோதரர்கள் 2 பேரும் டெல்லியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆவர்.

பரோலில் வெளியே வந்த அவர்கள், கடந்த 2016-ம் ஆண்டு முதல் மும்பையில் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்