தமிழக அரசு கலையும்போது ‘சிலிப்பர் செல்கள்’ வெளியே வருவார்கள் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி

1.40 கோடி தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர் தமிழக அரசு கலையும்போது ‘சிலிப்பர் செல்கள்’ வெளியே வருவார்கள் சசிகலாவை சந்தித்த பின் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்துள்ளனர்.

Update: 2018-01-15 23:30 GMT

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். அதன் பிறகு சிறையில் சசிகலாவை கடந்த ஆண்டு (2017) டிசம்பர் 28–ந் தேதி டி.டி.வி.தினகரன் நேரில் சந்தித்து பேசினார். சசிகலா மவுன விரதம் இருப்பதால் சைகை மூலம் அவரிடம் பேசியதாக டி.டி.வி.தினகரன் கூறினார்.

இந்த நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து பேசினார். காலை 11.45 மணிக்கு சிறைக்குள் சென்ற அவர், 2.45 மணிக்கு வெளியே வந்தார். 3 மணி நேரம் அவர் சிறைக்குள் இருந்தார். இந்த சந்திப்புக்கு பிறகு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

அரசியல் ரீதியாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சசிகலாவுடன் பேசினேன். எங்கள் அணியில் புதிய உறுப்பினர்களாக சேர இளைஞர்கள் உள்பட ஏராளமானவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு விண்ணப்பம் விநியோகம் செய்வது குறித்து சசிகலாவிடம் ஆலோசனை நடத்தினேன். அதற்கு அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இன்னும் பல ஆலோசனைகள் நடத்தினோம்.

ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. 33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் சசிகலா இருந்தார். அவருடைய முகவரியும் அந்த இல்லம் தான். நினைவு இல்லம் ஆக்கும் பணிகளை நல்லபடியாக செய்யட்டும்.

ஜெயலலிதாவின் திதி நிகழ்வுகள் நடக்கும்போது வருமான வரி சோதனை நடந்தது. அங்கு இருந்தவர்களை தமிழக அரசு விரட்டி அடித்தது. இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டினர். அடுத்து வரும் தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி அணியை மக்கள் புறக்கணிப்பார்கள்.

போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களும், கோர்ட்டும் சேர்ந்து முடிவு எடுத்ததால் வேலை நிறுத்தம் வாபஸ் ஆனது. இதில் தமிழக அரசுக்கு பங்கு இல்லை. இன்னும் கொஞ்சம் கூடுதல் சம்பள உயர்வு வழங்குமாறு கேட்டனர். அதை கொடுக்க வேண்டியதுதானே. சுயகவுரவத்திற்காக தமிழக அரசு இந்த பிரச்சினையை தீர்க்கவில்லை.

எம்.எல்.ஏ.க்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு வழங்கியது சரியல்ல. இந்த முடிவை சட்டசபையில் நான் ஏற்கவில்லை. அதை நிராகரித்தேன். உயர்த்தப்பட்ட சம்பளம் வேண்டாம் என்று நான் எழுதி கொடுப்பேன். சட்டசபையில் எனக்கு பேச சபாநாயகர் வாய்ப்பு வழங்குவதாக கூறினார். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அவர் நல்லவர் தான்.

சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் என்னை பார்த்து சிரித்தனர். யாரும் இல்லாதபோது சிலர் என்னிடம் பேசினர். சிலர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமி அணியிடம் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் 1½ கோடி பேர் உள்ளனர். இதில் 1.40 கோடி பேர் எங்கள் அணிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

செங்கோட்டையனை முதல்–அமைச்சராக்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம் என்று நான் சொல்லவில்லை. அப்படி ஒரு தகவல் இருந்ததாக கோர்ட்டில் வக்கீல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி எனக்கு தெரியாது. பொதுவாக ஜெயலலிதாவிடமோ அல்லது சசிகலாவிடமோ நான் யாருக்கும் சிபாரிசு செய்தது இல்லை. எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சர் ஆக வேண்டும் என்று சசிகலா முடிவு செய்தார். அந்த முடிவை கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இது தான் உண்மை.

அ.தி.மு.க.வில் 18 எம்.எல்.ஏ.க்களுடன் கூடுதலாக 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளது. இது மட்டுமின்றி ‘சிலிப்பர் செல்கள்‘ இருக்கிறார்கள். ஆட்சி கலையும்போது ‘சிலிப்பர் செல்கள்‘ வெளியே வருவார்கள். இந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி இன்னும் 2, 3 மாதங்கள் தான் நீடிக்கும் என்று நான் கருதுகிறேன்.

கர்நாடகத்தில் தமிழர்கள், கன்னடர்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். சட்டசபை தேர்தலில் எங்கள் அணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். தமிழர்கள், கன்னடர்கள் என்று பிரித்து கூற வேண்டாம். நாங்கள் கன்னடரை ஏன் நிறுத்தக்கூடாது?.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இடையே ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாடுகள் பற்றி முழு விவரம் எனக்கு தெரியாது. அதை தெரிந்துகொண்டு நான் கருத்து கூறுகிறேன். தமிழக கவர்னர் ஆய்வு நடத்துவதை நான் எதிர்க்கிறேன். அதற்காக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மக்களின் நலனுக்காக நாங்கள் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

டி.டி.வி.தினகரனோடு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல், பழனியப்பன், ரங்கசாமி, சுப்பிரமணியன் மற்றும் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரும் சிறைக்குள் சென்று சசிகலாவை சந்தித்து வந்தனர்.

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்துவும், திருப்பதியில் போலீஸ் பாதுகாப்பு குறித்து கனிமொழி எம்.பி.யும் கூறியுள்ள கருத்து பற்றி டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘ஆன்மிகம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட வி‌ஷயம். ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்து எனக்கு வேதனை தருவதாக உள்ளது. வெளிநாட்டில் யாரோ கூறினார்கள் என்பதை வைத்து அவர் தெரிவித்த இந்த கருத்தை ஏற்க முடியாது. மக்களின் இறை நம்பிக்கையை புண்படுத்தக்கூடாது. மக்களின் நம்பிக்கையை சிதைப்பது தவறு. மூடநம்பிக்கை என்ற வார்த்தையே தவறானது.

திருப்பதி கோவிலில் போலீஸ் பாதுகாப்பு குறித்து கனிமொழி எம்.பி. கூறியுள்ள கருத்து சரியல்ல. பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?. எல்லா மதமும் சமமானவை. எந்த மதத்தை பற்றியும் யாரும் தவறாக பேசக்கூடாது. அனைத்து மக்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டியது அவசியம்‘ என்றார்.

மேலும் செய்திகள்